

என்னென்ன தேவை?
இஞ்சி - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 150 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 2 எலுமிச்சை அளவு
எப்படிச் செய்வது?
இஞ்சியைத் தோல் சீவி வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் நல்லெண்ணெய் சிறிதளவு ஊற்றி, காய்ந்த மிளகாயைச் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதே கடாயில் இஞ்சியைப் போட்டு, தீயைக் குறைவாக வைத்து வதக்க வேண்டும். நன்றாக வறுத்த பின் தேங்காய்த் துருவலைப் போட்டு மொறு மொறுப்பாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிய பிறகு வதக்கிய இஞ்சி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைப் போட்டு, கரைத்த புளியை ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும். பின் காய்ந்த மிளகாய் இரண்டைக் கிள்ளிப்போட்டு, பெருங்காயத் தூளைப் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு அரைத்துவைத்த விழுதைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறுங்கள். எண்ணெய் மிதந்துவரும்போது வெல்லைத்தைப் போட்டுக் கிளறி இறக்க வேண்டும். சொதியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும். சப்பாத்தி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.