

திருவாதிரைக்கு களி என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு.
நாளை 22ம் தேதி திருவாதிரை விரதம் இருந்து, 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, களி சமைத்து, நைவேத்தியம் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் பக்தர்கள்.
திருவாதிரை களி செய்யும் முறை இப்படித்தான்!
தேவையானவை : அரிசி - ஒரு கப்,
வெல்லம் (பொடித்தது) - ஒன்றரை கப்,
தண்ணீர் - இரண்டரை கப்,
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் - சிறிதளவு.
என்ன செய்யவேண்டும்?
அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் நன்றாக உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, நன்றாக வேக வைக்கவும். கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி விடுங்கள்.
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பிறகு, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு நன்றாகக் கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.
அவ்வளவுதான்... திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று சொல்லி ஆடல்வல்லானுக்கு களி நைவேத்தியம் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
விரதம் மேற்கொள்ளாதவர்கள் கூட, களி நைவேத்தியம் செய்து பூஜை செய்யலாம். சுடச்சுட களியை ருசிக்கலாம்!