

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம் உணவுப் பழக்கமும் மாறிவருகிறது. இதனால் பலருக்கும் முப்பது வயதிலேயே கை, கால் மூட்டுகளில் பிரச்சினை ஏற்படத் தொடங்கிவிடுகிறது. நவதானியப் பயறு வகைகள், சிவப்பரிசி போன்றவற்றைத் தினசரியோ அடிக்கடியோ சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடலுக்கு வலு தரும் உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத் தருகிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன்.
பருப்புக் கீரை கோதுமை அடை
என்னென்ன தேவை?
சம்பா கோதுமை – 1 கப்
பச்சரிசி – கால் கப்
முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம்
பச்சை மிளகாய் – 6
உப்பு - தேவைக்கு
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
பருப்புக் கீரை – அரை கட்டு
நறுக்கிய சிறிய வெங்காயம் – 10
தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
எப்படிச் செய்வது?
சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவிடுங்கள். மறுநாள் பச்சரிசியைத் தனியே ஊறவைத்துக்கொள்ளுங்கள். இவை நன்றாக ஊறிய பிறகு முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து இட்லி மாவைவிடக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவுடன் நறுக்கிய பருப்புக் கீரை, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பிறகு மாவை வாழையிலையில் வைத்துத் தட்டி, நடுவில் ஒரு துளையிடுங்கள். இதைத் தவாவில் போட்டுச் சுற்றிலும் நெய்விட்டு இரண்டு பக்கங்களிலும் சிவக்க வேகவைத்து எடுங்கள்.