

என்னென்ன தேவை?
இட்லி அரிசி, பச்சரிசி, பாசிப் பருப்பு – தலா 100 கிராம்.
உளுந்து -1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் – தலா 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த திராட்சை – 10
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்
கருப்பட்டி, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இட்லி அரிசி, பச்சரிசி, பாசிப் பருப்பு உளுந்து ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை உடைத்துப்போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். கருப்பட்டி கொதித்ததும் அதை வடிகட்டி, அரைத்துவைத்துள்ள மாவுடன் கலந்து கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், திராட்சை, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மாவுடன் கலந்துகொள்ளுங்கள். பணியாரக் கல்லில் நெய் அல்லது எண்ணெய் தடவி, சிறு கரண்டியால் பணியார மாவை ஊற்றுங்கள். பணியாரம் உப்பி வந்ததும் திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுங்கள்.