

சத்துணவு என்றாலே அது சுவையாக இருக்காது என நினைத்துப் பல குழந்தைகள் முகம் சுளிப்பார்கள். சாப்பிட்டுப் பார்க்காமலேயே அவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். இதனாலேயே வளரிளம் பருவத்துக் குழந்தைகள் பலரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். ஆனால், சத்துணவு என்பது சுவை நிறைந்த உணவும்கூட என்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பார்வதி கோவிந்தராஜ். வளரிளம் பருவத்துக் குழந்தைகளின் உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
கறுப்பு உளுந்து கிரேவி
என்னென்ன தேவை?
கறுப்பு உளுந்து – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் -2
முந்திரிப் பருப்பு – 5
இஞ்சி - பூண்டு விழுது, கசகசா – தலா 1 டீஸ்பூன்
வேகவைத்த உருளைக் கிழங்கு – 1
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
உளுந்தை இருபது நிமிடம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். முந்திரியை ஊறவைத்து அதனுடன் கசகசாவைச் சேர்த்து விழுதாக அரையுங்கள். வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.
பிறகு அரைத்துவைத்துள்ள முந்திரி விழுதைச் சேர்த்துக் கிளறி, வேகவைத்த உருளைக் கிழங்கு, கறுப்பு உளுந்து இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். இதை சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.