

ப
ள்ளிக்கூடம் திறந்துவிட்டால் குழந்தைகள்கூட உற்சாகத்துடன் கிளம்பிவிடுவார்கள். ஆனால், தினமும் மதிய உணவுக்கு எதைக் கட்டித் தருவது எனப் பெற்றோருக்குத்தான் கவலை. “சோறு, குழம்பு எனத் தனித்தனியாகக் கொடுத்து அனுப்புவதைவிடக் கலந்த சாதமாகவோ சிற்றுண்டியாகவோ செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்குத் தானிய வகைகள், காய்கறிகள் போன்றவற்றை அரிசியுடன் கலந்து சமைத்துத் தரலாம்” என்கிறார் சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த நித்யா பாலாஜி. குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பக்கூடிய மதிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.
அன்னாசி புலவ்
பாசுமதி அரிசி - 1 கப்
அன்னாசிப் பழத் துண்டுகள்
(தோல் சீவி நறுக்கியது) - 1 கப்
அன்னாசி பழச் சாறு – அரை கப்
வெங்காயம் (மெலிதாக நீளவாக்கில்
நறுக்கியது) – அரை கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை, கரம் மசாலாத் தூள்,
மிளகாய்த் தூள் - தலா அரை டீஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை,
அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா 1
முந்திரி, பாதாம் - தலா 10
எண்ணெய் – அரை டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தண்ணீர் – முக்கால் கப்
பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவையுங்கள். குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பைனாப்பிள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.
மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை வதங்கும் கலவையில் போட்டு நன்றாக வதக்குங்கள். அரிசியைச் சேர்த்து நன்றாகப் புரட்டுங்கள். உப்பு, சர்க்கரை, அன்னாசிச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடுங்கள். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கிவிடுங்கள். நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துப் போட்டுக் கிளறுங்கள். வெங்காயப் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.