

கோ
டையின் வெம்மையிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசமாகச் செய்து கொடுக்கவும் கடல்பாசியும் பழங்களும் கலந்த உணவு வகைகள் உதவும். எளிதில் கிடைக்கக்கூடிய, செலவு அதிகம் இல்லாத உணவுப் பொருட்களைக் கொண்டு, குறைந்த நேரத்தில் எளிதாகச் செய்து குழந்தைகளை ஈர்த்து விடலாம் என்கிறார் தாம்பரத்தைச் சேர்ந்த எஸ். சங்கீதா. அப்படிச் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
ஃப்ரூட் மோல்ட்
கடல்பாசி
(அகர் அகர் / சைனா கிராஸ்) - 25 கிராம்
ஆப்பிள் – 1
பெரிய வாழைப்பழம் - 1
தர்பூசணி – ஒரு துண்டு
சர்க்கரை – 4 டீஸ்பூன்
வெள்ளரி விதை – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
கடல்பாசியைச் சிறிது தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பாசியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து அடுப்பில் வைத்து, சர்க்கரையைச் சேருங்கள். தோல் சீவிய ஆப்பிளையும் வாழைப்பழத்தையும் சிறிய மெல்லிய துண்டுகளாக நறுக்கி, அவற்றின் மீது எலுமிச்சைச் சாற்றை பிழிந்துகொள்ளுங்கள். தர்பூசணியை மிக்சியில் அடித்து, அதைக் கொதிக்கும் கடல்பாசிக் கலவையில் சேருங்கள். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிவைத்து, ஆப்பிள் - வாழைப்பழத் துண்டுகளை அதில் சேருங்கள். கரண்டியால் கலக்கிவிட்டு, வெள்ளரி விதைகளைத் தூவுங்கள். சூடு ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட் ஆனதும் ஜில்லென்று பரிமாறுங்கள்.