

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்துவரும் நாளைத் திருக்கார்த்திகையாகத் தமிழர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்த மாதத்தில் பாதசாரிகள் கவனமாக நடந்து செல்ல அந்தக் காலத்தில் மாலை நேரத்தில் வீடுகள்தோறும் விளக்கு ஏற்றப்படும். இதன் தொடர்ச்சியாகவே கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றும் வழக்கம் வந்தது என்று சொல்கிறவர்களும் உண்டு. தமிழகத்தின் சில இடங்களில் கார்த்திகை தீபத்தன்று இரவு சொக்கப்பனை கொளுத்துவதும் மாவலி சுற்றுவதும் உண்டு. சிலர் அகல் விளக்கேற்றி, பலவிதமான பிரசாதங்களைப் படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த விசாலா ராஜன், முருகனுக்குப் பிடித்த கந்தரப்பம், தேன்திணைப் பொங்கல் போன்றவற்றைச் செய்ய கற்றுத்தருகிறார்.
தேன் திணைப் பொங்கல்
திணை அரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - கால் கப்
சர்க்கரை - முக்கால் கப்
தேன் - 2 டீஸ்பூன்
பால் - 2 கப்
நெய் - கால் கப்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
திணை அரிசியை நன்றாகக் கழுவி, சிறிது நேரம் ஊறவையுங்கள். பாசிப் பருப்பை வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைச் சிறிது நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, ஆறியதும் வடிகட்டிக்கொள்ளுங்கள். அடிகனமான பொங்கல் பானையில் பாலுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் ஊறவைத்த அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்துக் குழைய வேகவிடுங்கள். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறுங்கள். வெல்லத்தின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து, நெய்யில் முந்திரி, திராட்சை இரண்டையும் வறுத்துக்கொட்டுங்கள். பொங்கலின் மேலே இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்தால் தேன் திணைப் பொங்கல் தயார்.