

இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடிவருகிறார்கள். இந்தத் திருநாளை இனிப்புகளுடன் மேலும் சுவையாகக் கொண்டாடி மகிழ கோர்மோலஸ், மில்க் க்ரீம் உள்ளிட்டவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த நித்யா பாலாஜி. இனிப்புகள் மட்டுமல்லாது பலவகையான உணவுப் பதார்த்தங்களைச் சமைப்பதில் வல்லவரான நித்யா, சமையலுக்காகத் தனி வலைத்தளத்தை நடத்திவருகிறார்.
கோக்கடா
துருவிய தேங்காய் - 2 கப்
ரவை - அரை கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
ரவையை வறுத்துத் தனியே வையுங்கள். தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றிச் சர்க்கரையைச் சேருங்கள். சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கம்பிப் பாகு பதத்துக்கு வரும்போது அரைத்த தேங்காய், வறுத்த ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். தேங்காய், ரவா கலவை கடாயின் ஓரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது ஏலக்காய்த் தூள், நெய் சேர்த்துக் கிளறி நெய் தடவிய ட்ரேயில் கொட்டுங்கள். சிறிது ஆறியவுடன் துண்டுகளாக்கிக் காற்றுப்புகாத டப்பாவில் வையுங்கள்.