Published : 01 Jul 2014 05:12 PM
Last Updated : 01 Jul 2014 05:12 PM

விஜய் சூப்பர் ஸ்டார் விவகாரம்: ஃபேஸ்புக்கில் பதிவிட்டது ஷாலினி அஜித் அல்ல!

நடிகர் விஜய் 'சூப்பர் ஸ்டார்' விவகாரம் தொடர்பாக, ஃபேஸ்புக்கில் ஷாலினி அஜித் பெயரில் வெளியிடப்பட்ட விளக்கப் பதிவு, அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 'அடுத்த சூப்பர் ஸ்டார்?' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நடிகர் விஜய் முன்னிலை வகித்ததாக, தமிழ் வார இதழ் ஒன்று கவர் ஸ்டோரி வெளியிட்டியிருந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்த் திரையுலகில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் நடிகர் விஜய், நடிகர் அஜித் ரசிகர்கள் கடுமையான கருத்துகளை வெளியிட்டு, விவாதங்கள் சூடுபிடித்தன.

இதன் தொடர்ச்சியாக, ஷாலினி அஜித் என்ற பெயரில், அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு விளக்கக் குறிப்பு வெளியானாது.

அதில், "அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து வார இதழ் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியது. அதன்படி, மற்றொரு நடிகர் வெற்றி பெற்று இருக்கிறார். அஜித் எப்போதுமே முதல் 'தல'தான். அவருக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை. அந்த வாக்கெடுப்பினைப் பற்றி அஜித் ரசிகர்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.

அஜித் ரசிகர்களின் செயல்கள் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. அஜித் எப்போதுமே கூறும் 'Live and Let Live' என்பதை எத்தனை ரசிகர்கள் பின்பற்றுகிறீர்கள் என்று தெரியவில்லை. உண்மையான அஜித் ரசிகர்கள் அவரை பின்பற்றுவார்கள். அவ்வாறு ஃபாலோ பண்ணாததால்தான் அவர் ரசிகர் மன்றத்தினையே கலைத்தார். ஆகவே, அஜித்தை சந்தோஷமாக வாழவிடுங்கள்" என்கிற ரீதியில் பெரிய விளக்கப் பதிவு வெளியிட்டப்பட்டது.

இந்தப் பதவை வெளியிட்டது, உண்மையிலேயே ஷாலினி அஜித் என்று நினைத்துகொண்டு, அந்தப் பதவை பலரும் பகிர்ந்து வருவதுடன், அது தொடர்பான செய்தியும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தரப்பினரிடம் இந்தப் பதிவு குறித்து விசாரித்தேன். அதன்படி, ஷாலினி அஜித் ஃபேஸ்புக்கிலேயே இல்லை என்பது தெளிவானது. அத்துடன், இந்த விவகாரம் குறித்து கருத்துகூறவே விரும்பவில்லை என்று அஜித் தரப்பு தெரிவித்தது.

எனவே, நடிகர் விஜய் 'சூப்பர் ஸ்டார்' விவகாரம் குறித்து ஷாலினி அஜித் பெயரில் இயங்கிவரும் போலி ஒருவரே அப்படி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x