Published : 19 Jun 2014 08:39 AM
Last Updated : 19 Jun 2014 08:39 AM

ஆந்திரா: கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 207 பேர் உயிரிழப்பு

கடலோர ஆந்திரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப காற்று பலமாக வீசுவதால் செவ்வாய்க்கிழமை மட்டும் 207 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மாவட்ட கலெக்டர்கள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், முழு விசாரணை நடத்தி, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1.5 லட்சம் நிதி உதவி வழங்குமாறும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

பருவ நிலை மாறுவதால், கடலோர ஆந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரித்துள்ளதாக விசாகபட்டினம் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், கிழக்கு,மேற்கு கோதாவரி, பிரகாசம், கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த அனல் காற்றுடன் வெயில் வாட்டி வருகிறது.

இந்த மாவட்டங்களில் காலை 7 மணி முதல் வெப்பம் படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணி வரை வெப்ப காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.

விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இம்மாவட்டங்களில், முதியோர், குழந்தைகள் என இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தாளாமல் இறந்ததாக கூறப்படுகிறது. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 207 பேர் இறந்துள்ளனர்.

கடந்த 4 நாள்களாக, 42 டிகிரி முதல் 45 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் ஜூன் மாதத்தில் மழை பெய்யாமல், வெயில் கொளுத்துவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து விசாகப்பட்டின வானிலை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆண்டு அரபிக் கடலில் ஏற்பட்ட புயலே தற்போதைய வெப்பத்துக்கு காரணம். புயலின் போது கடலோர பகுதியில் இருந்த ஈரப்பதம் முழுவதும் மேகத்தில் கலந்துவிட்டது. இதனால், தற்போது இப்பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளது. இன்னமும் 48 மணி நேரம் வரை இதே நிலை இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x