Published : 16 Jun 2014 08:57 AM
Last Updated : 16 Jun 2014 08:57 AM

பேச்சுவார்த்தை தொடர எல்லையில் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானுக்கு அருண் ஜேட்லி எச்சரிக்கை

இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர எல்லையில் அத்துமீறல்களை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அருண் ஜேட்லி 2 நாள் பயணமாக சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் வந்தார். சனிக்கிழமை அவர் மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் ஒமர் அப்துல்லாவை சந்தித்து பேசினார். அங்குள்ள ராணுவ தலைமை அலுவலகத்துக்கும் அவர் சென்றார்.

ஜேட்லி தனது பயணத்தின் 2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை, எல்லையில் ஹஜிபிர் கணவாய் அருகில் உள்ள ராணுவ நிலைகளை சென்று பார்த்தார். பின்னர் அவர் ஸ்ரீநகரில் நிருபர்களை சந்தித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பட்டுள்ள நிலையில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்படுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த ஜேட்லி, “ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படையினரும், மாநிலப் படையினரும் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு நிலவரம் எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பதை சிறிது காலத்துக்குப் பிறகு நாம் ஆராய்வோம். அதன் பிறகு இதுகுறித்து முடிவு செய்யலாம்” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆயுதப்படையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழும்போது, இதுகுறித்த விசாரணைக்கு அனுமதி வழங்குவது பற்றி ஆதாரங்களின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும். குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லாவிட்டால், விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது. ஆதாரம் இருந்தால், எங்கள் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஊடுருவல் மற்றும் அத்துமீறல்கள் தொடர்ந்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடருமா என கேட்கிறீர்கள். அது இயலாது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு, எல்லையில் அத்துமீறல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

எல்லையை பாதுகாக்கும் வீரர்களுட னும் ராணுவ அதிகாரிகளுடனும் பேசினேன். இப்பகுதிகளில் ஊடுருவல் களை முறியடிக்கும் வல்லமையை நமது ராணுவம் பெற்றுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் அத்துமீறல் சம்பவங்கள் நடந்தாலும் நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லையில் எத்தகைய தாக்குதல்களுக்கும் நமது ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக திடமாக நம்புகிறேன். இத்தகைய திருப்தியுடனேயே இங்கிருந்து திரும்புகிறேன்.

எனது பயணத்துக்கு அரசியல் நோக்கம் எதுவுமில்லை. பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்யவே இங்கு வந்தேன்.

காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்புவது தொடர்பான மத்திய அரசின் கொள்கை முடிவுகள் இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.

மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, ராணுவ மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x