Published : 02 Jun 2014 08:31 am

Updated : 02 Jun 2014 08:36 am

 

Published : 02 Jun 2014 08:31 AM
Last Updated : 02 Jun 2014 08:36 AM

கையில் காசு இல்லாவிட்டாலும் தினமும் 70 பேருக்கு அன்னப் படையல்: கைமாறு கருதாத காந்திமதியின் சேவை

70

‘‘நாளைக்கு என்ன வரும் என்று தெரியாது. ஆனால், யார் மூலமா வது வரவேண்டியது எப்படியாவது வந்துவிடும். அந்த நம்பிக்கையில் தான் அன்றாடப் பொழுது விடிகிறது’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் காந்திமதி.

யார் இவர்? மதுரை கீழமாசி வீதியில் உள்ள டெலிபோன் எக்ஸ் சேஞ்ச் வாசலில் தினமும் மதியம் 12 மணிக்கு தவறாமல் காந்திமதியைப் பார்க்கலாம். அவரது வருகையை எதிர்பார்த்து 50-க்கும் மேற்பட்டோர் அங்கு காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது பசியைப் போக்கும் புண்ணிய காரியத்தைச் செய்து வருபவர்தான் காந்திமதி.

சேவை செய்ய வந்தவர்

மதுரையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேவை செய்வதற்காக 9 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார் காந்திமதி. இப்போது அந்த சங்கத்தையே அவர்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தனது சேவை குறித்து ‘தி இந்து’விடம் மனம் திறந்து பேசுகிறார் காந்திமதி..

இந்த சங்கத்தை அன்பானந்தம் ஐயாதான் 12 வருஷமா நடத்திட்டு இருந்தார். நான் சேவை செய்யுறதுக்காக இந்த சங்கத்துக்கு வந்தேன். இயலாதவங்களுக்கு சேவை பண்றது பிடிச்சிருந்ததால, சம்பளம் வாங்காமலே வேலை பார்த்துட்டு இருந்தேன்.

ரெண்டு வருஷம் முன்னாடி அன்பானந்தம் ஐயா உடம்புக்கு முடியாமப் போய் இறந்துட்டாரு. அந்த நேரத்துல சங்கத்தை எடுத்து நடத்த யாரும் முன்வரல. ஏதோ ஒரு தைரியத்துல நானே எடுத்து நடத்த முடிவு பண்ணேன்.

தினமும் இங்கே பஜனை நடக்கும். வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் பெயர் சொல்லும் சங்கம் என்பதால், பசி என்று வந்தவர்களுக்கு தினமும் அன்னப் படையலும் நடக்கிறது. சங்கத்தில் போதிய இடம் இல்லாததால் இங்கு சாப்பாடு சமைத்து கீழமாசிவீதி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வாசலுக்கு கொண்டு போயிடுவோம். அங்கு பிளாட்பாரத்துல வைச்சு தினமும் அன்னப்படையல் நடக்கும். இங்க சாப்பிட வர்றவங்கள்ல பெரும்பாலானவங்க ஏழைகள், பிச்சைக்காரர்கள்தான். மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சிலரும் சாப்பிட்டுப் போவாங்க.

ஆன்மிக அன்பர்களின் உதவியில்..

எங்களது சேவை பற்றிக் கேள்விப்பட்டு, ஆன்மிக அன்பர்கள் அவங்களாவே வந்து நிதியுதவி செய்வாங்க. அவங்க கொடுக்கிற காசுலதான் தினமும் அன்னப் படையல் நடக்குது. டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அதிகாரிகளும் ஊழியர்களும் ரொம்ப ஆதரவா இருக்காங்க.

நாளைக்கு என எதையும் நாங்க சேர்த்து வைக்கிறதில்லை. ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு இருந்துடுவோம். நமக்கு என்ன தேவையோ அது யார் மூலமாவது சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துடும்.

பிறந்த நாள், திருமண நாள் இதுக்கெல்லாம் சிலபேர் வந்து அன்னதானம் செய்வாங்க. அப்படி இல்லாத நாட்களில் எங்களிடம் இருக்கும் காய்கனிகளை ஒன்றாகப் போட்டு சாம்பார் சாதம் ஆக்கிக் கொடுத்துவிடுவோம்.

சராசரியாக தினமும் 70 பேருக்கு ஒருவேளை அன்னப்படையல் வைக்கிறோம். இதுக்கு ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. இதுபோக, இந்தக் கட்டிடத்துக்கு மாத வாடகை ரூ.3500 கொடுக்கணும். எல்லாமே அன்பர்கள் உதவியில்தான் நடக்குது.

‘இறைவன்தான் படியளக்கிறார்’

இந்த சேவையை நான் செய்யுறதா நினைக்கல. இறைவன்தான் எல்லோருக்கும் படியளக்கிறார். அந்த சேவையில நானும் ஒரு ஊழியரா வேலை பார்க்கிறேன். காலா காலத்துக்கும் இந்த சேவை நிக்காம நடக்கணும்னு நீங்களும் பெருமாளை வேண்டிக்குங்க. வேண்டுதல் கோரிக்கையோடு விடை கொடுத்தார் காந்திமதி.

70 பேருக்கு அன்னப் படையல்காந்திமதியின் சேவைகாந்திமதிசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

You May Like

More From This Category

More From this Author