Published : 18 Jun 2014 04:17 PM
Last Updated : 19 Jun 2014 09:06 AM
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் திமித்ரி ஓ ரோகோஜின், பாதுகாப்பு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபின், இதியா ரஷ்யா இடையிலான முதல் உயர்நிலை பேச்சுவார்த்தை இதுவாகும்.
வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவு மற்றும் இரு நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசினர்.
பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இந்த ஆண்டு சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
பொருளாதார ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலை அமைக்கும் பணிகள் ஆகியவையும் அவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.
ரஷிய உதவியுடன் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது உலையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு 3 மற்றும் 4-வது அணு உலை அமைக்கும் ஒப்பந்தத்தில் அந்நாடு கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டது. இந்தியாவின் அணு உலை விபத்து இழப்பீடு சட்டத்தை, ரஷ்யா கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவின் மகத்தான வெற்றிக்காக, நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார்.