Published : 04 Nov 2014 01:00 PM
Last Updated : 04 Nov 2014 01:00 PM

சகாயம் குழுவுக்கு அனுமதி வழங்க காலதாமதம் ஏன்?- முதல்வருக்கு கருணாநிதி கேள்வி

நேர்மையான அதிகாரி சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை நடத்தவேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்று நடைமுறைப்படுத்திட இவ்வளவு கால தாமதம் ஏன்? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) கிரானைட் முறைகேட்டை புதிதாக ஒருவர் விசாரித்தால், ஏற்கெனவே நடந்த விசாரணைகள் காலதாமதமாகும் என்றும், கிரானைட் முறைகேட்டைக் கண்டு தமிழக அரசுக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார்.

இதற்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று செவ்வாய்கிழமை பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "எதற்கும் வாயைத் திறக்காத இந்நாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், என்னைத் திட்டி அறிக்கை விடுவதில் மட்டும் அக்கறை காட்டி வருகிறார். ஏடுகள் பன்னீர்செல்வத்தின் அறிக்கைக்கு "கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்" என்று தலைப்பிட்டிருக்கின்றன.

உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த முறைகேட்டில் என்னென்ன தவறுகள் நடந்தன - எப்படிப்பட்ட பரிமாற்றங்கள் நடந்தன என்பதை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரத் தானே, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சகாயம், ஐ.ஏ.எஸ்., அவர்களின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், அக்டோபர் 28-ம் தேதிக்குள் அவர் அந்த முறைகேடுகள் பற்றிய அறிக்கையை நீதி மன்றத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.

தீர்ப்பு கொடுத்தது உயர் நீதிமன்ற நீதிபதி! எனவே பதிலளிக்க வேண்டியது அங்கே தான். ஆனால் பன்னீரோ எனக்குப் பதில் சொல்லியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, அ.தி.மு.க. அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கே என்ன சொன்னார்கள்? சகாயம் விசாரணைக் கமிஷன் விரைவில் நடைபெற வேண்டுமென்று உயர் நீதிமன்றம் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

அந்தத் தீர்ப்புக்குக் காரணம் யார்? உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, சகாயம் கமிஷனை இயங்க விட்டிருந்தால், உச்ச நீதி மன்றத்தில் தலைகுனிந்து "குட்டு" வாங்கியிருக்க வேண்டாம் அல்லவா? உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்த பிறகாவது, அ.தி.மு.க. அரசு, சகாயம் விசாரணைக் கமிஷனை நடத்த விட்டிருக்கலாம் அல்லவா?

அதற்குப் பிறகும் உயர் நீதிமன்றத்திலே அ.தி.மு.க. அரசு தானே சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதிலே தான் உயர் நீதி மன்ற நீதிபதிகள், சகாயம் கமிஷன் விசாரணையை நான்கு நாட்களில் அமைத்து ஆணையிட வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, தமிழக அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்களே? அது அரசுக்குப் பெருமை தருகின்ற செயலா? இந்த நிலை யாரால் ஏற்பட்டது? என்னாலா ஏற்பட்டது?

இத்தகைய நெருக்கடி வளையத்திற்குள் சிக்கிக் கொண்ட பிறகு, "ஆப்பசைத்த குரங்கின்" நிலைமைக்கு ஆளான பன்னீர் அரசு வேறு வழியின்றி இறங்கி வந்திருக்கிறது. அதுவும் நான்கு நாட்கள் அலட்சியமாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் நேற்றையதினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், கனிம வளத்துறை தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் "உயர் நீதி மன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணைக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளதாம். இது இன்று காலையில் ஒரு நாளேட்டில் மட்டும் செய்தியாக வந்துள்ளது.

சகாயம் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்த போதே, அதிமுக அரசு நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி, நேற்று வெளியிட்ட உத்தரவை அப்போதே வெளியிட்டிருந்தால், நீதி மன்றத்தின் கண்டனத்திற்கும், அபராதத்திற்கும் ஆளாகி வெட்கக் கேடான ஒரு நிலையை உருவாக்கி இருக்க வேண்டாமல்லவா? இதைத் தான் நான் என் அறிக்கையில் கேட்டிருந்தேன். அதற்கு என்னை வசைபாடி, எதற்கும் வாய் திறக்காத பன்னீர் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், முதலமைச்சர் பன்னீர்செல்வம் செயல்படவில்லை என்றும், வாயே திறப்ப தில்லை என்றும் முதலமைச்சர் என்று தன்னை அழைத்துக் கொள்ளவே வெட்கப்படுகிறார் என்றும், மக்கள் மத்தியிலே பரவலாக ஒரு புகார் உள்ளது.

முந்தைய "மைனாரிட்டி" தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கிரானைட் முறைகேடு மறைக்கப்பட்டு விட்டதாக "பினாமி" ஆட்சி நடத்தும் பொம்மை முதல்வர் பன்னீர் தனது அறிக்கையிலே பிதற்றியிருக்கிறார்.

கழக ஆட்சிக் காலத்தில் நான் முறைகேட்டினை மறைத்தேன் என்றால், அப்போது பன்னீர் எங்கே போனார்? நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருக்க வேண்டியது தானே? கழக ஆட்சிக் காலத்தில் எந்த நீதிமன்றமாவது, கிரானைட் முறைகேடு குறித்து, யார் தலைமையிலாவது விசாரணை நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டு, அதனை நான் ஏற்காமல் இருந்து விட்டேனா? அப்படி இருந்தால் பன்னீர் எடுத்துக் காட்டியிருக்க வேண்டியது தானே?

கிரானைட் முறைகேட்டினைச் சட்டப் பூர்வமாகத் தகர்த்தெறியத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் ஜெயலலிதா எடுத்தார் என்றும் தன் அறிக்கையில் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி நடவடிக்கை எடுத்தது உண்மையானால், நேர்மையான அதிகாரி சகாயம், ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை நடத்தவேண்டுமென்று உயர் நீதி மன்ற நீதிபதிகளும், உச்ச நீதி மன்ற நீதிபதிகளும் உத்தரவிட்ட பின்னரும், அதனை ஏற்று நடைமுறைப்படுத்திட இவ்வளவு கால தாமதம் ஏன்? இதுதான் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்ததற்கான அடையாளமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x