Published : 08 Oct 2014 11:23 AM
Last Updated : 08 Oct 2014 11:23 AM

50-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: காஞ்சி அருகே பரவும் மர்மக்காய்ச்சல் - சாதாரண காய்ச்சல் என சுகாதாரத்துறை விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களிடையே திடீரென மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சுமார் 50 பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் அதிகப்படியான வலி உள்ளதாகவும் அதனால் நடமாட முடியாதநிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத் துறையினர் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மதூர் கிராமவாசிகள் கூறியதாவது:

‘கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்ததும் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தினர். இதில், கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் மட்டுமே வந்திருந்தனர். பாதிக்கப்பட்டோருக்கு எந்த விதமான பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. வெறும் நிலவேம்பு கஷாயத்தை மட்டும் மருந்தாக அளித்தனர். ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அவர் குணமடைவதற்குள் மற்றொருவர் காய்ச்சல் நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் குடும்பத்தில் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கிராம மக்களுக்கு சுகாதாரத்துறையினர் ஏன் ரத்த பரிசோதனை மேற்கொள்ளவில்லை என தெரியவில்லை. 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிறகும், மருத்துவர்கள் யாரும் இங்கு நேரில் வந்து சிகிச்சை அளிக்கவில்லை. இதனால், பெரும்பாலான கிராம மக்கள் வாலாஜாபாத், செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இதனால், கிராம மக்களின் நலன் கருதி, இப்பகுதியில் மருத்துவர்களின் தலைமையில் முகாம் நடத்தி, மர்மக்காய்ச்சல் நோய் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து, மதூர் ஊராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் கூறும் போது, சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார்.

சுகாதாரத்துறை விளக்கம்

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: ‘சுகாதாரத் துறையினர் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என கூறுவதை ஏற்க முடியாது. மதூர் கிராமத்தில் பரவிவரும் மர்மக்காய்ச்சல் குறித்து 24-ம் தேதிதான் சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அன்று முதல், கிராமத்தில் தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வீடு, வீடாக சென்று மாத்திரைகள் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். மேலும், கிராமத்தில் பரவி வருவது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் வைரல் காய்ச்சல்தான்.

அதனால் பயிற்சி பெற்ற செவிலியர்கள் மூலம் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. எனினும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று 2 மருத்துவர்கள் தலைமையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. குடிநீர் மூலம் காய்ச்சல் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால், ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் விநியோகத்தை நிறுத்துமாறு கூறியுள்ளோம்.

மதூர் கிராமத்தை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x