Published : 10 Oct 2014 08:25 AM
Last Updated : 10 Oct 2014 08:25 AM

தமிழக ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை: பாஜக தலைவர் தமிழிசை பேட்டி

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதே நேரம், அசாதாரண சூழ்நிலை நீடித்தால் மத்திய அரசு தலையிடும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி பாஜக மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுள்ளது. நிர்வாக சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துவருகிறது.

மக்கள் பாதிக்காத வகையில் அரசு இயந்திரம் சரிவர செயல்பட்டு, மாநிலத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை மாற்றவேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு தலையிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசைக் கலைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. அதேநேரம், தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

மதுஒழிப்புக் கொள்கையில் பாஜக தீவிரமாக உள்ளது. மது அருந்துவதால் இளம் வயதினர் அதிக எண்ணிக்கையில் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். டாஸ்மாக் வருமானத்தை ஈடுகட்டும் வகையில் மணல் மற்றும் கல்விக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதன் மூலம் சரிசெய்ய வேண்டும்.

மத்திய அமைச்சர்கள் சொத்துக் கணக்கை வெளியிட்டதுபோல, தமிழக அமைச்சர்களும் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டு, மாநிலத்தில் ஊழலற்ற நிர்வாகம் நடக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x