

மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பமான பன்சால் தரப்பிலிருந்து போலீஸாருக்கு ஒரு அழைப்பு வருகிறது. போலீஸார் சென்று விசாரணை நடத்தும்போது இன்ஸ்பெக்டர் ஜாட்டில் யாதவ் (நவாசுதீன் சித்திக்) அங்கு வர, பன்றி தலை வெட்டப்பட்டு வைக்கப்பட்டு, காகங்கள் பல இறந்து கிடப்பதை பார்க்கிறார். வீட்டில் இருப்போர் சூன்யம் வைத்துவிட்டதாக கூற வீட்டில் ஆய்வு செய்யும்போது பெண் துறவி, போதையில் சிக்குண்ட இளைஞர் என வித்தியாசமான மனிதர்களை பார்க்கிறார்.
போலீஸார் பாதுகாப்பு அளித்து விட்டு திரும்பிய பிறகு இரவு அவ்வீட்டுக்கு செல்கிறார். ஆனால் அங்கு ஐந்து பேர் வெட்டப்பட்டு இறந்து கிடக்கிறார்கள். அவ்வீட்டில் வெட்டுப்பட்டு உயிர் தப்பிய வீட்டு பணியாளையும் நேரில் பார்த்த மீராவையும், டீன்ஏஜ் சிறுமி ஆகியோரை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்குகிறார். வீட்டில் பன்றி தலையை வைத்து விட்டு சுவர் ஏறி தப்பியோரை சிசிடிவியில் அடையாளம் கண்டு செல்கிறார். அவர்களை பிடித்து விசாரிக்கும்போது அவர்களுக்கும் இக்கொலைகளுக்கும் சம்பந்தமில்லை என தெரிகிறது. ஆனால் உயர் அதிகாரிகளோ அவர்கள்தான் கொலையாளிகள் என வழக்கை முடிக்க சொல்கிறார்கள்.
அதையடுத்து அவர்களை துன்புறுத்துகிறார்கள். அடிப்பதால் உண்மை கிடைக்காது எனக்கூறி விட்டு, உண்மை தேடுகிறார். போதையில் சிக்குண்ட இளைஞர்தான் கொலையாளி என்ற கோணத்தில் வழக்கு நகர்கையில், டாக்டர் ரேவதி அவருக்கு உதவுகிறார். வழக்கின் பல சிக்கல்களை அவருக்கு தெளிவாக்குகிறார். அதிலிருந்து நூல் பிடித்து செல்லும்போது கிடைக்கும் அதிர்ச்சிகளே க்ளைமாக்ஸ். கொலைக்கு காரணமான பிளாஸ்பேக்கும் எதிர்பாராததுதான். அதிலும் கொலையாளிக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். இயக்குநர் ஹனி டிரஹான் சுமிதா சிங்கின் எழுத்தும் படத்துக்கு வலு.
இதில் முக்கியமான சமூக பிரச்சினையையும் அலசியிருப்பது க்ரைம் படத்தை மேல் மட்டத்துக்கு கொண்டு செல்கிறது. கடந்த 2020ல் ராத் அகேலி ஹை படத்தின் இரண்டாம் பாகம். ஆனாலும் இது புது வழக்காக படமாக்கியிருக்கிறார்கள். தொடக்கத்தில் பன்றித்தலை, காகங்கள் இறந்து கிடப்பது என்பதை சூனியம் என நம்ப வைத்து அதுபோல் படமா எண்ண வைத்துவிட்டு கொலைகள் நடக்க அதற்கான காரணம் வேறு என திரைக்கதையை வடிவமைத்துள்ளனர்.
விசாரணைக்கு நடுவே நவாசுதீன் சித்திக் ராதிகா ஆப்தே உடன் காதலும் படத்துக்கு சுவைதான் சேர்க்கிறது. இருவருக்கும் இடையிலான கண்ணாமூச்சியும் அழகு. அதில் "எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்கு. ஆனா என் மேலதான் நம்பிக்கையில்லை" என்ற வசனங்களும் ஈர்க்கிறது.தான் அமைதியாக இருப்பது பற்றி நவாசுதீன் சக போலீஸ்காரரிடம் "ஆக்ரோஷமா இருந்தா எதிரி சண்டை போடாமலேயே ஜெயிப்பான்" ஆகியவற்றையும் சொல்லலாம். சமூக பாதிப்புடன் கொண்ட க்ரைம் த்ரில்லர். நெட்பிளிக்ஸில் தமிழிலும் பார்க்கலாம்.