Jeffrey Epstein: Filthy Rich - அதிகாரத்தின் கோரமுகம் | ஓடிடி விரைவுப் பார்வை

Jeffrey Epstein: Filthy Rich - அதிகாரத்தின் கோரமுகம் | ஓடிடி விரைவுப் பார்வை
Updated on
1 min read

அமெரிக்காவில் பெரும் செல்வந்தராகவும், அரசியல் செல்வாக்கு மிக்கவராகவும் வலம் வந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இளம் பெண்களையும் சிறுமிகளையும் எப்படி தன் பசிக்கு இரையாக்கினார் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த நான்கு பாகங்கள் கொண்ட ‘Jeffrey Epstein: Filthy Rich’ ஆவணத் தொடர். 

எப்ஸ்டீனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களே இந்த ஆவணத் தொடரின் அடித்தளம். பல ஆண்டுகள் வாய் திறக்க முடியாமல் இருந்த பெண்கள், தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு கதையும் பார்ப்பவர்களின் மனதை உலுக்குகிறது.

எப்ஸ்டீன் ஒரு தனிமனிதனாக மட்டும் இச்செயல்களைச் செய்யவில்லை, அவரோடு தொடர்புடைய பல முக்கியப் புள்ளிகள், அவருக்கு உதவியாக இருந்த அவருடைய காதலி கிஸ்லைன் மேக்ஸ்வெல் போன்றவர்கள் என ஒரு பெரிய வலைப்பின்னலே இதில் செயல்பட்டுள்ளது என்பதைத் இத்தொடர் தெளிவாக விளக்குகிறது.

இயக்குநர் லிசா பிரையன்ட், இந்த வழக்கை வெறும் ஒரு செய்தியாக அணுகாமல், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதி பெற்றும் தரும் கோணத்தில் படமாக்கியுள்ளார். 2008-ம் ஆண்டிலேயே எப்ஸ்டீன் பிடிபட்டபோதும், மிகக் குறைந்த தண்டனையுடன் அவர் விடுவிக்கப்பட்டதும், மீண்டும் 2019-ல் அவர் கைது செய்யப்பட்டதும் என தொடரின் டைம்லைன் ஒரு த்ரில்லரைப் போல விறுவிறுப்பாக காட்டப்படுகிறது. 

குறிப்பாக, எப்ஸ்டீனின் புதிர் நிறைந்த மரணம், அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்கள் குறித்த கேள்விகளையும் இந்தத் தொடர் முன்வைக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக, உண்மையான வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் நேர்காணல்களைக் கையாண்ட விதம் ஒரு இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது. 

பாதிக்கப்பட்ட பெண்களின் தளராத போராட்டமே எப்ஸ்டீனின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது என்பதை இந்தத் தொடர் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. பணமும் செல்வாக்கும் இருந்தால் எத்தகைய கொடூரங்களில் இருந்தும் தப்பித்துவிடலாம் என்ற கசப்பான உண்மையை இத்தொடர் உரக்கச் சொல்கிறது

தற்போது எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்த செய்திகள் உலகையே உலுக்கி வரும் வேளையில் 2020-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணத் தொடர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது. 

Jeffrey Epstein: Filthy Rich - அதிகாரத்தின் கோரமுகம் | ஓடிடி விரைவுப் பார்வை
‘மை லார்ட்’ விமர்சனம்: ராஜுமுருகன் பேசிய வர்க்க அரசியல் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in