

அமேசானில் வெளியாகியுள்ளது ‘மாடர்ன் லவ்: சென்னை’ எனும் 6 குறும்படங்கள் கொண்ட ஆந்தாலஜி தொடர். முதல் படமாக ராஜுமுருகனின் ’லாலாகுண்டா பொம்மைகள்’ வட சென்னையையும் அங்கு வாழும் பல்வேறு மக்களின் உணர்வுகளையும் இயல்பாகப் படம்பிடித்துள்ளது.
பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் ‘இமைகள்’ கண்பார்வையை இழந்துகொண்டிருக்கும் பெண்ணின் காதலைப் பற்றியது. காதல் எந்த அளவுக்கு ஒருவரை இட்டுச் செல்லும் என்பதை உணர வைத்திருக்கிறது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியிருக்கும் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கற எமோஜி’, காதல் படங்களைப் பார்த்து தனக்கும் அதேபோல் காதல் அமைய வேண்டும் என்று நினைக்கும் பெண்ணைப் பற்றியது.
90ஸ் கிட்ஸுக்கு பல அழகான நாஸ்டால்ஜியா தருணங்களை அள்ளித் தருகிறது இது. அக்ஷய் சுந்தரின் ‘மார்கழி’யில் பதின்பருவப் பெண், ஓர் இளைஞனுடன் ஏற்படும் தற்காலிகக் காதலால், பெற்றோரின் மணவிலக்கு தந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறாள். பாரதிராஜாவின் ‘பறவைக்கூட்டில் வாழும் மான்கள்’ தன் கணவனின் திருமணம் தாண்டிய காதலை ஏற்றுக்கொண்டு விலகிச்செல்லும் பெண்ணை முன்னிறுத்துகிறது.
மணம் தாண்டிய உறவுகளால் பெண்களே அதிகப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் சமூகத்தில் இத்தகைய கதைப் பிரச்சினைக்குரியதாகிறது. ஆனால் எடுத்துக்கொண்ட களத்துக்கேற்ற முதிர்ச்சியுடன் கையாண்டிருப்பது படத்தைக் காப்பாற்றுகிறது. இறுதிப் படமாக தியாகராஜன் குமாரராஜாவின் ‘நினைவோ ஒரு பறவை’ காதல், ஆண்-பெண் உறவு, பாலியல் ஒழுக்கம் சார்ந்த நவீன சிந்தனைகளை இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் திரைக்கதை சிலருக்குக் குழப்புவதாகவும் சிலருக்கு ரசிக்கத்தக்கப் புதுமையாகவும் இருக்கும். சென்னையை மையமாகக் கொண்ட கதைகள் என்பதைத் தாண்டி பெண்களை முதன்மையப் படுத்தும் கதைகள் என்பதும் இதன் பொதுவான அம்சம்.
இதிலுள்ள 6 படங்களும் அனைவரையும் கவராது. இதில் எந்தப் படங்கள் பிடிக்கிறது எவை பிடிக்கவில்லை என்பது அவரவர் ரசனையைப் பொறுத்து வேறுபடும். அதுவே இந்தத் தொடரின் சிறப்பும் சறுக்கலும்.