

நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் நான்காவது படமாக இடம்பெற்றிருப்பது அக்ஷய் சுந்தரின் 'மார்கழி'.
கீபோர்ட் பிளேயரான ஜெயசீலனுக்கும் அவரது மனைவிக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறது. இவர்களின் ஒரே மகளான இளம்பெண் ஜாஸ்மினை (சஞ்சுளா சாரதி) அவரது தாய் ஏற்றுக்கொள்ளாததால், தந்தையுடன் வளர்கிறார் ஜாஸ்மின். தாய் தந்தையின் விவகாரத்து ஏற்படுத்திய பாதிப்பில் இருக்கும் ஜாஸ்மீனுக்கு ஒரே ஆறுதல் இசை. அந்த இசை அவருக்கு பேரமைதியை தருகிறது. இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சர்ச்சில் நடக்கும் கொயர் (Choir)கிளாஸிற்கு சென்றுவரும் ஜாஸ்மினுக்கு, விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டுக்கு வரும் மில்டன் ( Che Khoy Sheng) மீது பதின்பருவத்து காதல் அரும்புகிறது. கனவுகளை களவாடி, உள்ளூணர்வில் மின்சாரம் பரவும் பதின்பருவக் காதல் ஜாஸ்மீனுக்கு ஏற்படுத்தும் மாற்றங்கள் இறுதியில் என்னவாகிறது என்பதற்கான விடையே 'மார்கழி'.
சென்னையின் செயின்ட் தாமஸ் மவுண்ட்தான் இந்தப் படத்தின் லேண்ட்ஸ்கேப். கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் சைக்கிளில் சர்ச்சுக்கு செல்வதும், கொயர் கிளாஸில் பாடுவதுமாக அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. ஐபேடில், பாடல்களைக் கேட்டுக்கொண்டு சோகமே உருவாக காட்சியளிக்கும் ஜாஸ்மின், காதல் வந்த கனத்தில் இருந்து தன்னை அழகாக்கிக் கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இந்தத் திரைப்படம், பதின்பருவத்தில் பலரும் கடந்துவரும் ஒரு மெல்லிய உணர்வுதான். அந்த மென்மையை இந்த திரைப்படம் நிறைவாகவே தந்திருக்கிறது. இப்படத்தில் நடித்த மற்ற பாத்திரங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தாலும், மில்டனாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை இயக்குநர் தேர்வு செய்துள்ளது உருத்துகிறது.
இந்தப் படத்தில் மொத்த கிரெட்டும், ஜாஸ்மினாக வரும் சஞ்சளா சாரதிக்கும் , படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும்தான். அதிலும் குறிப்பாக, மழையில் நனைந்தபடி மில்டன் வீட்டுக்குச் செல்லும் ஜாஸ்மின் பியோனோவில் 'உறவுகள் தொடர்கதை' பாடலை இசைக்கும் காட்சி அப்ளாஸ். அதேபோல் ஜாஸ்மின் ஐபேடில் அடிக்கடி கேட்கும் 'தென்றல் புதிது தேனினும் இனிது' இளையராஜாவின் குரலில் கேட்க மனம் குளிர்ந்து போகிறது. இசையை மையமாக கொண்ட இந்தக் காதல் கதைக்கு இளையராஜாவின் இசை பெரும்பலம் சேர்த்திருக்கிறது.
அவன அப்படி பார்த்திருக்கியா? எப்படி? எனக்கு புரியல? உனக்கு புரியலா?, என்னை ஏன் உனக்கு பிடிச்சிருக்கு? போன்ற விடலைப்பருவத்து கேள்விகள், உரையாடல்களும் ரசிக்க வைக்கிறது. செயின்ட் தாமஸ் மவுன்ட்டின் உச்சயில் அமர்ந்தபடி சென்னையை பார்த்துக்கொண்டே பெற்ற முதல் முத்தத்தின் ஈரம்தான் இந்த 'மார்கழி'
வாசிக்க: