Published : 27 Feb 2023 04:30 PM
Last Updated : 27 Feb 2023 04:30 PM

ஓடிடி திரை அலசல் | நண்பகல் நேரத்து மயக்கம் - ஒலியும் ஒளியும், சில ‘தெளிவு’ அனுபவங்களும்!

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'நண்பகல் நேரத்து மயக்கம்'. தமிழகத்தின் கருப்பு - வெள்ளை டிவி காலத்து பின்னணியில் கலர்புஃல்லான ஒரு கிராமத்தையை கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். உலகப் பொதுமறையாம் திருக்குறளின் துறவறவியலில் வரும் நிலையாமை அதிகாரத்தின் 339-வது குறளான, 'உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்ற குறள்தான் இந்த திரைப்படத்தின் ஒன்லைன். இறப்பு உறங்குவதைப் போன்றது, அந்த உறக்கத்தில் இருந்து எழுவதைப் போன்றது பிறப்பு என்ற பொருள்தரும் குறளால் இன்று பலரது தூக்கத்தைக் களைத்திருக்கிறது இத்திரைப்படம்.

பொதுவாகவே, கான்கிரீட் காடுகளில் செல்போன் டவர்கள் பூத்திடாத நிஜ மனிதர்களோடு உயிர்த்திருப்பவை அசல் கிராமங்கள். நகரத்து கடற்கரைகளில் சூரியன் உதிப்பதாக நம்பப்பட்டாலும், அது குதித்து மகிழ்ந்து விளையாடுவது வெள்ளந்தி மனிதர்கள் வாழும் கிராமத்து வீதிகளில்தான். சூரியன் உள்ளிட்ட இயற்கையின் ஆகப்பெரும் சக்திகளுடன் இணைந்திருத்தலே கிராமத்து வாழ்க்கையின் பேரழகு. கிழக்கும் மேற்குமாக கடக்கும் சூரியனை குறுக்கும் நெடுக்குமாக நடந்துப் பார்த்து கணித்து வைத்திருப்பவர்கள் கிராமத்து மனிதர்கள்.

நிலா, சூரியன், வானம், மேகம், மழை, புளியமரம், வேப்பமரம், ஆலமரம் , செடிகொடிகள், இழைதழைகள், வயல் சோளக்காடு, கிணத்துமேடு, ஊர் மந்தை, டூரிங் டாக்கீஸ், ஒத்தையடிப்பாதை, சொசைட்டி ஆபீஸ், ஆடு, மாடு, கோழி, எரு , உரம் , சாணம், வாய்க்கால் வரப்பு, குளத்தங்கரை, ஆத்தங்கரை, அம்மன் கோயில், அய்யனார் சிலை, பால்காரர், தோட்டம், பம்புசெட், போஸ்ட்மரமென இவை அத்தனையோடும் ஒரு பிணக்கம் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எப்போதும் இருக்கவேச் செய்யும்.

இந்தப் பிணக்கம் கிராமங்களின் பல கதைகளுக்கு வித்தாகிறது. முன்னெப்போதாவது ஏதாவதொரு காரணத்துக்காக அந்த கிராமத்தில் உள்ள மரத்திலோ, கிணற்றிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறக்க நேர்ந்திருந்தால், அதிலிருந்து இறந்தவர்கள் கிராமத்து மக்களின் நம்பிக்கைக்குரிய அமானுஷ்யங்களாக மாறிவிடுகின்றார்.

இந்த நம்பிக்கை அந்த மனிதர்களை பல கட்டுப்பாட்டுக்குள் இயங்க வைத்துவிடுகிறது. உச்சிப் பொழுதுகளில் தனியே போகாதே என்றும், வயது வந்த பெண்ணையோ, கருத்தரித்த பெண்ணையோ உடன் அழைத்துச் செல்லும்போது கையில் ஒரு இரும்புத்துண்டையும் கொடுக்கச் செய்கிறது. பகல் பொழுதுகளில் கறி சமைத்து எடுத்துச் சென்றால் அதில் ஒரு கறித்துண்டை போட அறிவுறுத்துகிறது. கருப்பாக இருப்பதாலோ என்னவோ காகங்கள் முன்னோர்களாகவும், இறந்தவர்களாகவும் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் வீட்டு கூரையின் மீது அவை அமர்ந்து கரைந்தால், அது உறவினர்களின் வருகைக்கானது என்கிறது. இந்தப் பின்னணியில் இத்திரைப்படத்தை அணுகி, பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மூவட்டுப்புழாவைச் சேர்ந்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்துவிட்டு திரும்புகின்றனர். இதில் ஜேம்ஸுடன் (மம்மூட்டி) அவரது மனைவி மற்றும் மகனும் இருக்கின்றனர். சொந்த ஊர் திரும்பும் வழியில் ஒரு மதிய உணவுக்குப் பின் வேனில் பயணிப்பவர்கள் அசந்து தூங்க, வேகமெடுத்துச் செல்கிறது அந்த வேன். ஓரிடத்தில் வேனில் வரும் ஜேம்ஸ் இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி செல்கிறார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை. இதனால் பதற்றமடையும் உடன் வந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சென்று தேடுகின்றனர்.

ஜேம்ஸ் என்ன ஆனார்? எங்கே போனார்? வேனில் வந்தவர்கள் எங்கெங்கு தேடுகிறார்கள்? அவர்கள் ஜேம்ஸை எங்கே எப்படி பார்க்கிறார்கள்? சுந்தரம் யார்? ஜேம்ஸ் எப்படி சுந்தரமாகிறார்? வேனில் வந்தவர்கள் ஜேம்ஸை மீட்க எவ்வாறு முயல்கின்றனர்? அவை பலனளிக்கிறதா? ஜேம்ஸ் மீண்டு வந்தாரா? இல்லையா? - இதையெல்லாம் நிகழ்விடத்தில் இருந்து மைக்ரோஸ்கோப்பை பார்வையாளர்களின் கண்முன் நிறுத்தி அலசி ஆராய்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தின் மையக் கதாப்பாத்திரத்தில் வரும் மம்மூட்டியின் இயல்பை மீறாத நடிப்பு பார்வையாளர்களை கதைக்களத்துடன் நெருக்கம் கொள்ளச் செய்கிறது. கிராமத்தில் சுந்தரமாக வரும் காட்சிகள், ஊர் மந்தையில் கதைபேசும் காட்சிகள், மது அருந்தும்போது சிவாஜி போல வசனம் பேசும் காட்சி, தங்களுடன் வரவேண்டும் என வேனில் வந்தவர்கள் அழைக்கும்போது ரகளை செய்யும் காட்சியென மம்மூட்டி தனது நடிப்பால் படம் முழுக்க ரசிக்க வைத்திருக்கிறார்.

மம்மூட்டியின் மனைவியாக வரும் ரம்யா சுவி, பூங்குழலியாக வரும் ரம்யா பாண்டியன், ஜி.எம்.குமார், பூ ராமு, நமோ நாராயணன், வேன் டிரைவராக வரும் ராஜேஷ் ஷர்மா என அனைத்து கதாப்பாத்திரங்களும் படத்தை எங்கேஜிங்காக வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரம்யா பாண்டியன் திறமைக்கு இந்தப் படமே போதும் எனக் கூறும் வகையில், ஒடிசலான தோற்றத்தில், கணவனை இழந்த இளம்பெண்ணாக, அத்தனைப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் அனைவருமே தங்களது கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்கின்றனர். மம்மூட்டியின் பார்வை தெரியாத அம்மாவாக வரும் பாட்டி, மம்மூட்டியை மடியில் படுக்கவைத்து தூங்க வைப்பதும், நேரெதிரே இருந்தபடி சதா ஓடிக் கொண்டேயிருக்கும் டிவியை கூர்ந்து கவனிப்பதுமாய், மூன்று இடங்களில் கெக்கலித்து சிரித்தும் பார்வையாளர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்கிறார்.

இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் பங்கு அலாதியானது. படம் பார்க்கும் ஒவ்வொரு கண்களிலும் கேமராவைப் பொருத்தி கதை சொல்லியிருக்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவு. வேளாங்கண்ணியின் தங்கும் விடுதிகள், காணிக்கைப் பொருட்கள், மெழுகுதிரிகள், ஜெபமாலைகள், சுரூபங்கள், மாதா பாடல்கள், புகைப்படங்கள், தெருவோர கடைகளென ஆரோக்கிய மாதாவின் ஆலயத்தைச் சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் தொட்டுப் பார்த்து மகிழ்ந்திருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா.

படத்தின் டைட்டில் கார்டில் காட்டப்படும் வெற்றிலைக் குதப்பிய, தந்தட்டி, பாம்படம் அணிந்த கிராமத்து பாட்டி - தாத்தாக்களின் க்ளோஸ் அப் ஷாட்களின் வழியே தெரியும் முகச்சுருக்கங்களின் ஊடே பார்வையாளர்களை கிராமங்களின் அட்ச தீர்க்க ரேகையில் சூழலச் செய்திருக்கிறது ஒளிப்பதிவு. படத்தின் எல்லா ஷாட்களும் ஸ்டெடி ப்ரேமில் தனிக்கதை சொல்லியிருக்கிறது. குறிப்பாக, வேனில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வேனுக்குள் இருக்கும் மெட்டலில் அனைவரும் தெரிவது போல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமையானது. அதேபோல் மம்மூட்டியின் மனைவி மற்றும் மகன், ரம்யா பாண்டியன் மற்றும் அவரது மகள் இருவேறு வீடுகளில் இருந்தபடி வெவ்வேறு மனநிலையில் மம்மூட்டியின் விழிப்புக்காக காத்திருப்பதை ஒரே ப்ஃரேமில் காட்சிப்படுத்தியிருப்பது இப்படத்தின் மாஸ்டர் பீஸ் காட்சி. இப்படி படம் முழுவதும் தனது தேர்ந்த ஒளிப்பதிவால் பார்வையாளர்களின் கண்கள் முழுவதையும் அபகரித்துக் கொள்கிறார் தேனி ஈஸ்வர்.

இந்தப் படத்திற்கு திருவருட்செல்வர், முள்ளும் மலரும், நிழல்கள் உட்பட10-க்கும் மேற்பட்ட பழைய தமிழ் திரைப்படங்களின் பாடல்களும், ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட இரண்டு மூன்று பழைய திரைப்படங்களின் வசனங்களும், விளம்பரங்களும், அக்காலத்திய தொலைக்காட்சி பக்தி நாடகம் ஒன்றும், அதிகாலை நேர நிகழ்ச்சி ஒன்றும் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை இத்திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே பயன்படுத்தியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

அசைவற்றுக் கிடக்கும் தானியக் காடுகள், நிழல் கவிழ்ந்த பெரிய மரங்கள், அமைதியான கிராமத்து வீதிகள், வீட்டுச் சுவரில் எருவாட்டி தட்டும் கிராமத்து பாட்டிகள், மழையில் கரைந்த செம்மண் சுவர் வீடுகள், காரைப் பெயர்ந்த திண்ணை வீடுகள், உலுத்துப் போன நிலையில் கழற்றி வைக்கப்பட்ட மரக்கதவுகள் என மறக்கமுடியாத ஒலியும் ஒளியும் காலத்து மனிதர்களின் வயலும் வாழ்வையும் அவர்களது நம்பிக்கையிலும் பார்வையாளர்களை பயணிக்க வைத்திருக்கிறது இத்திரைப்படம். எந்திரமயமான தினசரி வாழ்க்கையில் இருந்து பார்வையாளர்களை தெளியச் செய்திருக்கிறது இந்த 'நண்பகல் நேரத்து மயக்கம்'.

கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், பிப்ரவரி 23-ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x