

ரஞ்சித் உன்னி எழுதி, இயக்குநர் சுதீஷ் ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மலையாளத் திரைப்படம் ‘இனி உத்தரம்’ (Ini Utharam). காட்சியமைப்புகளை கையாண்டுள்ள விதம், வசனங்கள், நுட்பமான நகைச்சுவை, பாடல் ஆகியவை திரைப்படத்தின் மையக்கருவை சிதைக்காமல் நகர்த்தியிருக்கும் விதம் ரசிக்கும்படியாக உள்ளன. குறிப்பாக கடைசி 45 நிமிடங்கள், என்ன காரணமாக இருக்கும்? என்று கேள்வியை பார்வையாளர்களின் மனதில் ஓடவிட்டு ஆன்டி க்ளைமாக்ஸ் உடன், புதிருக்கான விடையை பார்வையாளர்களே முடிவு செய்துகொள்ள விட்டிருக்கும் விதத்தில் முத்திரைப் பதித்திருக்கிறார் இயக்குநர்.
ரொம்ப கம்மியான காதல், ரொமன்ஸ் தூவி சேட்டன்களுக்கே உரிய பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் அடிபொளி க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்ட்தான் இந்தத் திரைப்படம். இன்னும் எத்தனை விதமான போலீஸ் கதைதான் அந்தக் கடவுளின் தேசத்து மண்ணுக்குள் பொற்குவியலாய் புதைந்து கிடைக்குமோ என அதிசயக்கத்தக்க வகையில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு ஜானரில் பயணப்பதால், மலையாளத் திரையுலகின் காக்கிச் சட்டை இன்வெஸ்டிகேஷன்கள் சலிப்பே ஏற்படுத்துவதில்லை.
மலைக் கிராமத்துக்குச் செல்லும் பேருந்தில் பயணிக்கும் ஜானகி (அபர்ணா பாலமுரளி) இடுக்கியில் உள்ள சாந்தபுரா காவல் நிலையத்தில் இறங்குகிறாள். காவல் நிலையத்திற்கு செல்லும் ஜானகி, அங்கு பணியில் இருக்கும் காவலர்களிடம் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும், அந்த காவல் நிலையத்தின் (CI) சர்கிள் இன்ஸ்பெக்ட்ரான கர்ணன் (கலாபவன் ஷாஜான்) முன்பு மட்டுமே சரண்டர் ஆவேன் என்றும் கூறுகிறாள்.
விஷயம் தெரிந்து ஸ்டேசனுக்குத் திரும்பும் கர்ணன், ஜானகியின் வாக்குமூலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தர்க்கம் செய்கிறார். அதற்குள் தகவலறிந்து காவல் நிலையத்தை மீடியா நிருபர்கள் மொய்க்கத் தொடங்க, மீடியாவில் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும், அருகில் உள்ள எரித்து புதைத்துள்ளதாகவும் கூறுகிறார். இந்த தகவல் மீடியா மூலம் பரவியதால், வேறுவழியின்றி காவல் துறை மீடியா சகிதமாக ஜானகி சொல்லும் இடத்துக்கு சென்று தோண்டிப் பார்த்தால் அங்கு இரண்டு உடல்கள் கிடைக்கின்றன.
அப்போது ஜானகி, CI கர்ணனின் உதவியோடுதான் இந்த உடலை தான் எரித்து புதைத்ததாக கூற அங்கிருந்து வேகமெடுக்கிறது திரைப்படம். அந்த இரண்டு உடல்களில் ஜானகி கொன்று எரித்து புதைத்ததாக சொன்ன உடல் கண்டெடுக்கப்பட்டதா? CI கர்ணனுக்கும் ஜானகிக்கும் என்ன தொடர்பு? CI கர்ணனுக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தா? ஜானகி சொன்ன இடத்தில் கண்டெடுக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? ஜானகி கொலை செய்ததாக கூறிய உடல் எங்கே? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான விடைதான் படத்தின் திரைக்கதை.
தேசிய விருது பெற்ற நடிகையான அபர்ணா பாலமுரளி தனது நடிப்பாற்றலை அலட்டிக் கொள்ளாமல் வெளிக்காட்டியிருக்கிறார். இந்த க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் சப்ஜெக்ட்டுக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார். அதேபோல் கலாபவன் ஷாஜான், தனக்கான கதாப்பாத்திரத்தின் அழுத்தம் உணர்ந்து, முகபாவனைகளிலே தனது எண்ணங்களை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார். இப்படத்தில் வரும், மற்றொரு மிக முக்கிய கதாப்பாத்திரம் ஹரீஷ் உத்தமன். படத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் முழுக்க அவர் தமிழில் பேசுவதும், கருத்து சொல்வதும் ஒரு கட்டத்தில் சலிப்பைத் தருகிறது.
ஆனால், அவர் பேசும் வசனங்கள் ரொம்ப காத்திரமான வசனங்களாக இருக்கின்றன. குறிப்பாக, "எப்பவுமே கூட்டத்துக்கு புத்தி இல்ல, தனியா யோசிக்கிறவனுக்குத்தான் புத்தி" , "பொண்ணுன்னா உன்ன மாதிரிதான் தைரியமாக இருக்கனும், சும்மா நடந்ததையே நெனச்சி அழுது புலம்பிக்கிட்டு இருக்காமல்", "யாருமே தப்பு பண்ணனும்னு நெனக்க மாட்டாங்க, தப்பு பண்ணிட்டா அதை மறைக்கணும்னுதான் ஆசபடுவாங்க" உள்ளிட்ட வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
நடந்தவற்றை அறிந்துகொள்ளும் ஆவல், படத்தின் மற்ற தொழில்நுட்ப பணிகளையோ, அதன் குறைகளையோ கண்டுகொள்ள பார்வையாளர்களுக்கு வாய்ப்பு தரவில்லை. ஆனாலும் கேரளத்தின் பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழல் நிச்சயம் பார்வையாளர்களின் கண்களையும் மனதையும் குளிர்விக்கும். இருந்தாலும் க்ரைம் த்ரில்லர் படத்திற்கே உரிய பங்களிப்பை ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவும், ஹேசம் அப்துல் வஹாபின் இசையும், ஜித்தின் டி.கேவின் எடிட்டிங்கும் சிறப்பாக செய்திருக்கின்றன.
படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் திரையில், "Every Answer Has a Question" என்ற கார்ட் வரும் இடம். அதுவரை பார்த்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த படத்துக்கான விடையாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் 'Ini Utharam' திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த திரைப்படம், டிசம்பர் 23-ம் தேதி முதல், ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.