

1969-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பசப்பா மாளிகே எனும் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து கர்நாடக மாநில காவல் துறைக்கு தீராத தலைவலியாக இருந்த உமேஷ் ரெட்டியின் உண்மைக் கதையை விவரித்திக்கிறது இந்த ஆவணப்படம்.
ஜெயஸ்ரீ சுப்பையா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு உள்ளிட்ட உமேஷ் ரெட்டி மீது 9 வழக்குகளில் குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கெனவே போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் உமேஷ் ரெட்டி. இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் உமேஷ் ரெட்டி மீதான வழக்குகளை விசாரித்த பெங்களூரு விரைவு நீதிமன்ற நீதிபதி கே.சுகன்யா, மரண தண்டனை மற்றும் 7 ஆண்டு சிறை மற்றும் 25,000 அபராதம், 10 ஆண்டு சிறை மற்றும் 25,000 அபராதம் என பல்வேறு தீர்ப்புகளை வழங்குகிறார்.
மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு, 2009-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி உச்ச நீதிமன்றமும், ஜெயஸ்ரீயின் மரண வழக்கை அரிதினும் அரிதாக கருதி மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கிறது.
இதைத்தொடர்ந்து உமேஷ் ரெட்டியின் கருனை மனுவை கர்நாடக அரசும், குடியரசுத் தலைவரும் தள்ளுபடி செய்கின்றனர். இதையடுத்து உமேஷ் ரெட்டி மரண தண்டனையை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2022 நவம்பர் 4-ம் தேதி மரண தண்டனையை 30 ஆண்டுகால சிறை தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இப்படி நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்தி வெளியே மீண்டும் சுதந்திரமாக சுற்றித் திரிய விரும்பும் உமேஷ் ரெட்டி யார் என்பதை விவரிக்கிறது Indian Predator: Beast of Bangalore ஆவணப்படம். இதற்குமுன் வெளிவந்த Indian Predator சீரிஸின் கடந்த 3 சீசன்களில் டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிடட்ட வடஇந்நியாவின் கொடூரமான குற்றவாளிகள் குறித்து பேசியிருந்த நிலையில் 4-வது சீசனில் தென்னிந்தியாவில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொடர் பாலியல் வன்கொடுமை, திருட்டு மற்றும் கொலைகளை செய்துவிட்டு போலீஸிடம் சிக்காமல் தப்பித்து வந்த சைக்கோ கொலையாளி உமேஷ் ரெட்டி குறித்து விவரித்திருக்கிறது.
1969-ம் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பசப்பா மாளிகே எனும் கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து கர்நாடக மாநில காவல் துறைக்கு தீராத தலைவலியாக இருந்த உமேஷ் ரெட்டியின் உண்மைக் கதையை விவரித்திக்கிறது இந்த ஆவணப்படம். ஆவணப்படத்தில் பேசும் ஒரு காவல் அதிகாரி, 90-களின் பிற்பகுதியில் பெங்களூருவில் உள்ள வீடுகளில் கிரில் கேட் போடும் கலாச்சாரம் வந்ததே உமேஷ் ரெட்டியால்தான் என்று கூறுகிறார்.
கொடுமை என்னவென்றால், சிஆர்பிஎஃப் வீரான உமேஷ் ரெட்டி, ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தபோது உயர் அதிகாரி ஒருவரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துவிட்டு அங்கிருந்து தப்பி கர்நாடகத்துக்கு வருகிறான். வந்தவன் தனது பழைய பின்னணிகளை மறைத்து கர்நாடக மாநில ஆயுதப்படை காவலராக சேர்ந்துவிடுகிறான். போலீஸாக இருந்துகொண்டே இந்த கொடூர குற்றங்களில் ஈடுபடும் உமேஷ் ரெட்டி சுலபமாக மாட்டிக் கொள்கிறான். ஆனால், அவனுக்கு எதிராக வலுவாக ஆதாரங்கள் இல்லாததால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.
உமேஷ் ரெட்டியின் இலக்கு குடும்ப பெண்கள்தான். காலை 11 மணி முதல் மாலை 3 மணி இதுதான் அவன் அதிகமான குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நேரம். காரணம் இந்த நேரங்களில் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் வேலைக்குச் சென்றுவிடுவர். தண்ணீர் கேட்டும், முகவரி கேட்டும் தனியாக பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் நுழையும் உமேஷ், பெண்களைத் தாக்கி, நிர்வாணப்படுத்தி வக்கிரங்களை நிகழ்த்திவிட்டு அவர்களது நகைகள் மட்டும் உள்ளாடைகளை திருடிச் செல்வதை தனது வழக்கமாக கொண்டிக்கிறான். ஆவணப்படுத்தில் பேசும் பல காவல்துறை அதிகாரிகளும் இந்த தகவலை உறுதி செய்கின்றனர்.
உமேஷ் ரெட்டியின் இருப்பிடங்களில் சோதனை மேற்கொள்ளும்போது, தங்கம், வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றுடன் கிலோ கணக்கில் பெண்களின் உள்ளாடைகளையும் போலீஸார் கண்டெடுக்கின்றனர். இதுகுறித்து உமேஷ் ரெட்டியிடம் கேட்கும்போது, இவைகளை அணிந்துகொண்டுதான் இரவில் உறங்குவதாக கூறுகிறான். 'fetishism' என்று வரையறுக்கப்படும் இது பாலியல் சார்ந்த உளவியல் நோய். அதாவது உயிரற்ற பொருட்களைக் கொண்டு தனது இச்சையைத் தீர்த்து கொள்ளுதல். அவை பெண்களின் ஆடைகள், உள்ளாடைகள், காலணிகள் என எதுவாகவும் இருக்கலாம்.
இந்த சைக்கோ நோயாளியின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் குற்றச் சம்பவங்களின் போது நிர்வாணப்படுத்தப்பட்டதால், இந்த சமூகத்துக்கும், குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்கும் பயந்து அவன் மீது புகாரளிக்க பெண்கள் பலர் முன்வரவில்லை.இது அவனுக்கு மிகப்பெரிய சாதாகமாகிவிடுகிறது. இதனால் அவன்மீது திருட்டு வழக்குகள் மட்டுமே பதிவாகிறது. இந்த ஆவணப்படத்திலும் கூட எந்தவொரு நேரடியான பாதிக்கப்பட்ட பெண் சாட்சியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. வெறுமனே இந்த வழக்குகளை விசாரித்த காவல் துறை அதிகாரிகளின் வெர்ஷன் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
3 எபிசோட்களை இந்த ஆவணப்படம் உமேஷ் ரெட்டி, அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், அவனது க்ரைம் ஸ்டைல், காவல் துறையிடமிருந்து அவன் 3 முறை தப்பிச் சென்றது, காவல் துறை அதிகாரிகளின் விசாரணை என அனைத்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. குறிப்பாக ஆவணப்படத்தில் பேசியிருக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர்களின் பதிவு மிக முக்கியமானது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் சாட்சியளிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் ஏன் முன்வருவது இல்லை என்பது குறித்து அவர்கள் விளக்கும் இடங்கள் சமூகத்தின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.
இவைத்தவிர இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை சந்திக்கும் சறுக்கல்கள், சாட்சி ஆவணச் சட்டத்தின் முக்கியத்துவம், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை இந்த சமூகம் எப்படி அணுகும் என்பது குறித்து ஆழமாக பேசியிருக்கும் 'Beast of Bangalore' ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.