Published : 26 Dec 2022 03:23 PM
Last Updated : 26 Dec 2022 03:23 PM

ஓடிடி திரை அலசல் | Jaya jaya jaya jaya hey - குடும்ப வன்முறைகளின் வலியும், நையாண்டி அணுகுமுறையும்!

நசீத் முகமது பேஃமியுடன் இணைந்து எழுதி இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ (jaya jaya jaya jaya hey). குடும்ப வன்முறை என்ற மிக முக்கியப் பிரச்சினை இங்கே நகைச்சுவை மூலம் கையாளப்பட்டிருக்கிறது. இந்தக் காலத்து பெண்கள் கணவன்களின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு, இந்த சமூகத்தின் ஆணாதிக்க பாசாங்குகளை பிரதிபலிக்கும் கண்ணாடிப் போல அமைதியாக உட்கார்ந்திருக்கமாட்டார்கள்; அப்படி உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதை நையாண்டியாக பேசுகிறது இத்திரைப்படம்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி போல வளர்க்க வேண்டும் என்ற தந்தையின் லட்சியத்தின்படி வளர்கிறாள் ஜெயாபாரதி (தர்ஷனா ராஜேந்திரன்). ஆனால், சராசரி மிடில் கிளாஸ் குடும்பத்து பெண்களின் வாழ்க்கையைப் போலத்தான், ஜெயாவின் வாழ்க்கையில் எந்தவிதமான வித்தியாசங்களும் இருக்கவில்லை. கல்லூரி படிப்பை முடிப்பதற்குள்ளாகவே, தங்கமான பையன் என்று கூறி கோழிப் பண்ணை உரிமையாளரான ராஜேஷ்க்கு (பாசில் ஜோசப்) ஜெயாவுக்குத் திருமணம் முடித்து வைக்கப்படுகிறது.

தினமும் காலையில் இடியாப்பமும் கடலைக்கறியும் சாப்பிடும் வழக்கம் கொண்ட ராஜேஷுக்கு, ஒருநாள் ஜெயா யூடியூப் பார்த்து கற்றுக் கொண்ட புது டிஷ்ஷை சமைத்து வைக்க அவளுக்கு ராஜேஷுன் முதல் அறை விழுகிறது. அதன்பிறகு சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் அறை விழுவது பொதுவான வழக்கமாகிவிடுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் ஜெயா கூறும்போதெல்லாம், அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறாள்.

ஜெயாவை கல்லூரிப் படிப்பை முடிக்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்காத ராஜேஷ், வீட்டு வேலைகளோடு ஜெயா தன்னை கவனித்துக் கொண்டால் போதும் என்பதே ராஜேஷுன் எண்ணம். இந்நிலையில், ஜெயாவை ராஜேஷ் வழக்கம்போல ஒருநாள் அறையும்போது, அதை தடுக்கும் ஜெயா அவனை ஓங்கி உதைத்து விடுகிறாள். ஜெயாவால் அதை எப்படி செய்ய முடிந்தது? கணவன் - மனைவி இடையே இதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன? இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை நடந்ததா? ஜெயாவை ராஜேஷ் எப்படி பழிதீர்க்கிறான்? - இதுதான் படத்தின் திரைக்கதை.

படத்தின் தொடக்கத்தில் சோகமான படத்தைப் போலத் தோன்றினாலும், நேரம் செல்ல செல்ல பார்வையாளர்கள் தங்களை மறந்து சிரிக்கத் தொடங்கும் வகையில், படத்தை இயக்கியிருக்கிறார் விபின். அதேபோல், நவீன சமூகத்தில் சமூக ஊடகங்களின் பங்கு பல்வேறு ஆக்கபூர்வமான விஷயங்களையும் கற்றுத்தர தவறவில்லை என்பதையும் இப்படம் பேசியிருக்கிறது. குறிப்பாக, ஒரே மாதிரியான சமையல் டெம்ப்ளேட்கள் இன்றைக்கு பல வீடுகளில் மாறியிருப்பதற்கு யூடியூப் சமையல் ரெசிபிகளின் பங்கு மிக முக்கியமானவை.

அதேபோல படத்தின் நாயகி யூடியூப் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம் அவரது வாழ்க்கையில் என்ன மாதிரியான பாதுகாப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை எங்கேஜிங்காகவும் நகைச்சுவையுடனும் பேசியிருக்கிறது இந்தப் படம். படத்தின் பாத்திரங்கள் தேர்வு அனைத்துமே அத்தனைப் பொருத்தமாக உள்ளன. குறிப்பாக, இளம் கணவன் மனைவியாக வரும், பாசில் ஜோசப் - தர்ஷனா ராஜேந்திரன் ஜோடி அருமையாக நடித்துள்ளனர். குறிப்பாக தர்ஷனா ராஜேந்திரன் ஆசை, ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆக்ரோஷம், கோபம் என பல பரிமாணங்களை சிறப்பாகவே செய்திருக்கிறார். அதேபோல், பாசில் ஜோசப்பும் வலியை உணர்ந்து நடித்திருக்கிறார்.

படத்தின் மற்றொரு சிறப்பாக பார்ப்பது, படத்தின் தலைப்பு. காலங்காலமாக நம் நாட்டில் பெண்கள் குறித்து என்னதான் பெருமை கொள்ளும் வகையில் அன்னைபூமி, தாய்நாடு என்றெல்லாம் அழைத்தாலும் கூட குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டே கொண்டிருக்கின்றன. இதைப் பகடி செய்யும் வகையிலேயே தேசிய கீதத்தின் வரிகளில் வரும் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' வை படத்தின் தலைப்பாக வைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் இயக்குநர்.

ஆணின் அனைத்து தேவைகளுக்கும் பெண் தேவை. ஓர் ஆண் இல்லாமல் பெண்ணால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஆண், பெண் இல்லாமல் வாழ முடியாது. இதுபோன்ற வசனங்கள் கவனிக்கத்தக்கவை. நீதிமன்ற காட்சியில் வரும் வசனங்களும், எழுப்பப்படும் கேள்விகளும் சமூகத்தின் யதார்த்தத்தை விளக்குகின்றன.

படத்தின் இசையமைப்பாளர் அன்கித் மேனனின் இசை நகைச்சுவைப் படத்திற்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. அதேபோல், கதையோட்டத்திற்கு ஏற்ப அவ்வப்போது வரும் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. பின்னணி இசைக்கு பெரிய ஸ்கோப் இல்லாத கதை என்றாலும்கூட, கிடைத்த இடங்களில் எல்லாம் தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார் அன்கித்.

2021-ம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவணக் காப்பக பதிவேட்டு புள்ளி விவரங்களின்படி, குடும்ப வன்முறை குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் தென்னிந்திய அளவில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498 (A) -ன் கீழ், கேரளாவில், மொத்தம் 4997 குடும்ப வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 5079 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2018 லிருந்து 2021 வரையிலான தேசிய குற்ற ஆவணக் காப்பக பதிவேட்டு புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில், இந்திய அளவில் குடும்ப வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள், அவர்கள் வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள காவல் நிலையத்தில், உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ பாதிக்கப்பட்டதற்கான மருத்துவச் சான்றிதழை ஆதாரமாக சமர்ப்பித்து புகார் அளிக்கலாம். அப்படி இல்லாவிட்டால்கூட 100-க்கு போன் செய்து புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளித்ததை பதிவு செய்து வைத்துக் கொண்டாலே போதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்தத் திரைப்படம் இதுபோன்ற சாத்தியமானவைகள் குறித்தும் குடும்ப வன்முறைகளின் ஆழத்தையும் பேசவில்லை. குடும்ப வன்முறையை மேலோட்டமாக நையாண்டி செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது. அதேநேரம், இந்தப் படத்தின் நாயகி ஜெயாவைப் போல் எத்தனை பெண்களால் செய்துவிடமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இப்படியான விமர்சன பார்வையோடு இல்லாமல், சற்றே ரிலாக்ஸாக இந்தப் படத்தை பார்த்தால் மனம் விட்டு சிரிக்கலாம். இந்தப் படம் ஹாட் ஸ்டார் ஓடிடிட தளத்தில் காணக் கிடைக்கிறது.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x