Published : 02 Dec 2022 09:54 PM
Last Updated : 02 Dec 2022 09:54 PM

ஓடிடி திரை அலசல் | Chhello show -  சிறுவனின் கைகூடிடும் கனவுத் தொழிற்சாலையின் கதை!

இயக்குநர் பான் நளின் (Pan Nalin) எழுதி இயக்கியிருக்கும் குஜராத்தி மொழித் திரைப்படம் 'செல்லோ ஷோ’ (Chhello show | the last film show) தனது பிரமிக்க வைக்கும் கற்பனைகள், உறவுகளின் உன்னதம், சாதி, சமூகம் குறித்த வலிமையான வசனங்கள், நிச்சயமற்ற எதிர்காலத்தை சுமந்து நிற்கும் டீக்கடை, பிலிம் ரோல் சினிமாக்களின் இறந்த காலம், டிஜிட்டல் சினிமாவின் நிகழ்காலம், மீட்டர் கேஜ் ரயில் பாதைகளைத் தின்று செமிக்கும் பிராட் கேஜ் ரயில் பாதைகளென நிகழ்கால நிஜங்களை, தனது சினிமா பயணத்தின் கடந்தகால நிகழ்வுகளுக்கு உயிரூட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர். இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரைப்படம் ‘செல்லோ ஷோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் பசுமை சூழ்ந்த அழகிய கிராமம் சலாலா. அவ்வூரின் ரயில்வே ஸ்டேசனில் தேநீர் கடை வைத்திருப்பவரின் 9 வயது மகன் சமே. பள்ளி சென்ற நேரம்போக தனது தந்தைக்கு உதவியாக அந்த ரயில்வே ஸ்டேசனில் தேநீர் விற்பனை செய்கிறான். சமேவின் தந்தை பக்கத்து நகரில் உள்ள ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும் சினிமா தியேட்டரில் ஓடும் 'ஜெய் மாகாளி' திரைப்படத்தைப் பார்க்க தனது குடும்பத்தை அழைத்துச் செல்கிறார். அப்போதுதான் சமே தனது முதல் சினிமாவைப் பார்க்கிறான். அகண்டு விரிந்த வெண்திரையும், இருக்கைக்குப் பின் தூரத்து சுவரின் துவாரத்தின் வழியாக வரும் ஒளியும் அவனுக்கு சினிமா குறித்த தேடலை அதிகரிக்கச் செய்கின்றன. படம் முடிந்து வீடு திரும்பும் வழியில், சினிமா குறித்த மகனது கேள்விகளால் கோபமடைந்த அவனது தந்தை இதுவே உனக்கு முதலும், கடைசியுமான சினிமா என்று அவன் வாயடைக்கிறார்.

இந்த தடைதான் அவனை மீண்டும், மீண்டும் சினிமா பார்க்க தூண்டுகிறது. அது எப்படி நிகழ்கிறது என்பதை அறிய முற்படுகிறான். இதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? அவனது இந்த ஆசையை குடும்பத்தினர் எப்படி பார்த்தனர்? அவனது நண்பர்கள் என்ன செய்தனர்? அவனது ஆசை நிறைவேறியதா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

குழந்தைப் பருவத்தில் படைப்பாற்றல் திறன் அதிகமிருக்கும். அதனால்தான் இப்பருவத்தில் குழந்தைகள் அதிகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பர். சரியான பதில் கிடைக்காத தருணங்களில், சம்பந்தப்பட்ட விஷயத்தின் மீதான தேடல் அதிகமாகிவிடும். அதுகுறித்து பேசுவதையும், அதை தேடிச் செல்வதற்காக தண்டிக்கப்பட்டாலோ அதன் மீதான விருப்பம் காத்திரமாகிவிடுகிறது. இது எல்லா மனிதர்களிடமிருந்தும் வெளிப்படும் மிகச் சாதாரண நிகழ்வுதான் என்றாலும் குழந்தைப் பருவத்தில் அது தீவிரமானதாக இருக்கும்.

கனவுத் தொழிற்சாலையின் கலைடாஸ்கோப் வண்ணக் கனவுகள் சிறுவன் சமேவின் வாழ்வை அர்த்தம் பொதிந்ததாக மாற்றுகிறது. அவனது விருப்பத்தால் எழக்கூடிய அனைத்து பிரச்சினைகளையும் துணிவுடன் எதிர்கொள்ளும் நம்பிக்கையைக் கொடுக்கிறது. சமூக விழுமியங்களுக்கும் தண்டனைக்கும் பயந்து பதுங்கி கொள்ளாமல், வெண்திரையில் படும் ஒளி சினிமாவாக மாறும் கலை அறிவியலை துரத்திப் பிடிக்கிறது. இத்தனை விதமான பரிமாணங்களை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் சமேவாக மாஸ்டர் பவின் ராப்ரி அட்டகாசம் செய்திருக்கிறார்.

அந்த ஹேர்ஸ்டைலுக்கு ஆயிரம் ஹார்டின் விடலாம். அவனோட நண்பர்களாக நடித்திருக்கும் அத்தனைப் பேருமே அற்புதமானத் தேர்வு. அனைவருமே வெகு சிறப்பாக பங்களித்துள்ளனர். ரயில்வே டிராக்கில் ஆனியை வைத்துவிட்டு செடிகளின் மேல் படுத்துக் கொண்டு வானத்தில் பறக்கும் ஜெட் விமானத்தை பார்க்கும் முதல் காட்சி தொடங்கி, தாய் தந்தையரை பிரிந்து புறப்படத் தயாராகும் ரயிலேறி பரோடா செல்லும் போது தன் நண்பர்கள், நல விரும்பிகளிடமிருந்து பிரியாவிடை பெறும் இறுதிக்காட்சி வரை அச்சிறுவனின் யதார்த்தமான நடிப்பு படம் பார்ப்பவர்களின் கண்களைவிட்டு அகலாது.

சமேவின் அப்பாவாக திபென் ராவலும், அம்மாவாக ரிச்சா மீனாவும் அசத்தலான பாத்திரப்படைப்புகள். தான் சார்ந்திருக்கும் சமூகம் சினிமா தொழிலை இழிவாக பார்க்கும் என்பதை உணர்ந்து மகனை தண்டிக்கும் காட்சிகளிலும், சமேவின் பதிலால் கடுப்பாகும் இடங்களில் திபென் ராவலும், மகனுக்கு விதவிதமாக மதிய உணவு சமைத்துக் கொடுப்பதிலும், சமேவின் மீதான கணவனின் கடுமையான தாக்குதல்களின் போது தடுத்து நிறுத்தி மகனை அரவணைத்துக் கொள்ளும் காட்சிகளில் ரிச்சா மீனாவும் போட்டி போட்டிக் கொண்டு ஆடியன்ஸ்களின் அப்ளாஸை அள்ளிச் செல்கின்றனர். இவர்கள் தவிர இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்களில் புரொஜெக்டர் ஆபரேட்டராக வரும் பைஃசல் (பவேஸ் ஸ்ரிமிலி) துணைக் கதாப்பாத்திரம் என்பதோடு மட்டுமின்றி சமேவுக்கு சினிமாவின் ஒளி ஒலி பாடத்தை வெகு சுலபமாக பயிற்றுவித்த முதல் ஆசிரியர்.

செல்லுலாய்ட் சினிமாவின் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சையைப் பேசியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரிய காட்சியியல் விருந்தாக அமைந்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் சுவப்னில் எஸ். சோன்வனே (Swapnil S. Sonawane) காட்சி அமைப்புகளில் பார்வையாளர்களின் கண்களை கொள்ளை கொள்கிறார். ரயில்வே டிராக்கின் நடுவே, கலர்கலரான உடைந்த கண்ணாடித் துண்டுகளை வைத்திருக்கும் காட்சி, ரயில்வே ஸ்டேசனில் தனியாய் நிற்கும் தேநீர் கடை, ஒரு மழையில் நனையும் டீக்குடித்துவிட்டு வைக்கப்பட்ட கண்ணாடி டம்ளர்களுடன் தன்னந்தனியாக தொங்கிக் கொண்டிருக்கும் டீ கிளாஸ் ஸ்டாண்டு, சினிமா தியேட்டர், புரொஜெக்டர் ரூம் என படம் முழுக்க ஒளிப்பதிவு கவிதையாக வரையப்பட்டிருக்கிறது.

சிறுவன் சமே தீப்பெட்டி அட்டைகளைச் சேகரித்து கதை சொல்லும் காட்சிகள், பிலிம் ரோல்களை வைத்து வெள்ளை வேட்டியை திரையாக்கி, சூரிய ஒளியை கண்ணாடி வழியே கடத்தி சினிமா ஓட்டும் காட்சிகள், சமே வீட்டின் கண்ணாடி பாட்டில் அடுக்கிய தாழ்வான சமையல் கூடம், சப்பாத்திக்கு சமைக்கப்படும் விதவிதமான சைடிஷ் மேக்கிங் காட்சிகள் அழகியல் ஆச்சரியங்களாக அமைந்திருக்கின்றன. ஆலையில் உருத்தெரியாமல் அழிக்கப்படும் புரொஜெக்டர் எவர்சில்வர் ஸ்பூனாக மாறுவதையும், உலையில் கொதிக்க வைக்கப்பட்ட பிலிம் ரீல்கள் பிளாஸ்டிக் வளையல்களாக உருமாறும் காட்சிகளின் ஷாட்கள் உண்மையை உணரவைக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியில் வளையல்களுக்கான குளோஸ் அப் ஷாட்களில் சிறுவனது குரலில் உச்சரிக்கப்படும் பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்களும், பெரிய மனிதரின் குரலில் உச்சரிக்கப்படும் ஹாலிவுட் இயக்குநர்களின் பெயரும் வரும் இடம் டைரக்டரின் மாஸ்டர் டச்.

காதலனுக்கு கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த காதலி, காதலியை துண்டுத்துண்டாக வெட்டி நாய்க்கு போட்ட காதலன், கணவனை 10 துண்டாக வெட்டி பிஃரிட்ஜில் மறைத்த மனைவியென மனிதத்தன்மை அருகிவரும் பெரியவர்களின் சாபக்கேடான உலகிலிருந்து, குழந்தைகளை விலக்கி தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மிகப்பெரிய லட்சியங்களை நோக்கி குழந்தைகள் எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும் வெற்றிக்கு வித்திடும் என்பதை வண்ணமயமாக பேசியிருக்கிறது இந்த 'Chhello show' திரைப்படம். படத்தை பார்த்தபின் உங்களுக்கு சிறுவயது லட்சியம் நினைவுக்கு வரலாம். இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x