

இயக்குநர் கிம் டே-ஜின் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் கொரியன் வெப் சீரிஸ்தான் 'தி கிங் ஆஃப் பிக்ஸ்' ( The King of Pigs). இப்போது இரண்டே எபிசோடுகள்தான் வெளிவந்துள்ளன. ஆனால், 55 நிமிடம் ஓடக்கூடிய முதல் எபிசோடும், 45 நிமிடம் ஓடக்கூடிய இரண்டாவது எபிசோடும் பேசியிருப்பது ஏதோ கொரியாவில் நடக்கும் பிரச்சினையைப் பற்றியது அல்ல. நம் அனைவரது பள்ளிக் காலத்து நினைவுகளை பற்றியதுதான்.
பள்ளிக்கூடங்கள்தான் இன்று தமிழகத்தின் தவிர்க்க முடியாத பேசு பொருளாகியிருக்கிறது. அப்படிப்பட்ட பள்ளிப் பருவத்தில் நாம் பார்த்த, பழகிய, கடந்து வந்த, அனுபவித்த ஒரு சில மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டிருக்கும் வன்மங்களும், வக்கிரங்களும்தான், 'தி கிங் ஆஃப் பிக்ஸ்' வெப் சீரிஸின் கதைக்களம்.
ஒரு கொலைக்கான காரணத்தை கண்டறியத் தொடங்கும் பெண் போலீஸ் அதிகாரிக்கு கிடைக்கும், கொலைகாரனின் தடயக் குறிப்புகளிலிருந்து நீள்கிறது இந்தக் கதை. அதுவும் அந்தக் குறிப்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் படித்த பள்ளி நண்பனுக்கானது எனும்போது, புருவங்கள் உயரத் தொடங்கும் நம்மை, அந்த நண்பனும் ஒரு போலீஸாக இருந்தால் என்னவாகும்? - இந்த சுவாரஸ்யத்தோடு அடுத்த எபிசோடிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார் இயக்குநர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கூடத்தில் அனுபவித்த வன்முறைகளின் அதிர்ச்சியிலிருந்து மீளாது வாழும் ஹ்வாங் கியுங் மின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கிம் டோங் வூக். அவரது நண்பரான ஜங் ஜாங் சுக் கதாபாத்திரத்தில், துப்பறியும் போலீஸாக வருகிறார் கிம் சுங் கியூ. அதே போல் கொலையாளியை துரத்தும் பெண் துப்பறியும் போலீஸ் அதிகாரியான காங் ஜின் ஆஹ்-க வருகிறார் சே ஜங் ஆன்.
பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒருவர், அந்த அனுபவங்களை நினைவுகூர்ந்து, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கினால் என்னவாகும் என்பதுதான் இந்த 'தி கிங் ஆஃப் பிக்ஸ்'. துயரமான அனுபவங்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரங்கள் மூலம் பள்ளி வன்முறையின் தோற்றம் மற்றும் நவீன சமுதாயத்தில் அது எப்படி ஊடுருவி கிடக்கிறது என்பது குறித்து பேசப்படுகிறது.
'தி கிங் ஆஃப் பிக்ஸ்' என்பது இயக்குநர் யோன் சாங் ஹோ அதே பெயரில் இயக்கிய அனிமேஷன் தொடரை அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பாகும். ஏற்கெனவே அனிமேஷன் சீரிஸை பார்த்தவர்களுக்கு இந்த வெப் சீரிஸ் வடிவிலான தொடர் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும். ஹ்வாங் கியுங் மின் பள்ளிப் பருவத்தில் அனுபவிக்கும் வன்முறைகள் வலிகளின் உச்சம். அதுபோன்ற வன்முறைகள் எந்தவொரு குழந்தைக்கும் எந்தவொரு சூழ்நிலையிலும், எங்கும் ஏற்படக்கூடாது.
இந்தக் கதையின் தலைப்பிலும், ஒரு கதாப்பாத்திரமாகவும் பன்றியை இயக்குநர் முன்னிறுத்துகிறார். இத்தனைக்கும் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பன்றிகள் பிரதான உணவாக இருந்தாலும், ஹ்வாங் கியுங் மின்னுக்கு கடந்த கால நினைவுகளும், வன்முறை எண்ணமும் வரும்போதெல்லாம் பன்றியின் முகம் பொருந்திய ஒரு கதாப்பாத்திரமும் காட்டப்படுகிறது. அது வெறுமனே கொரியாவுக்கு மட்டுமல்லாது, பன்றிகளை அருவெறுக்கத்தக்க, ஒரு துஷ்ட சக்தியாக பார்க்கக்கூடிய இந்திய சமூகத்திற்கும் அது பொருந்திப் போகிறது.
உலகில் வாழும் எண்ணற்ற உயிரினங்களில் ஒன்றான பன்றிகளுக்கு சில பிரத்யேக குணாதிசயங்கள் இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. புதிதாகப் பிறந்த பன்றிக்குட்டிகள் தங்கள் தாயின் குரலைக் கேட்டு ஓடக் கற்றுக்கொள்கின்றன. காண்பதற்கு மிக சோம்பேறிகளாத் தோன்றும்; ஆனால் வயது வந்த பன்றிகள் மணிக்கு 11 மைல் வேகத்தில் ஓடக்கூடியவை. அதேபோல் பன்றிகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை. மேலும், அவை குளிர்ச்சியடைவதற்காகவே எப்போதும் சேற்றில் மூழ்கி கிடக்கின்றன. ஒரு பன்றியின் சத்தம் 115 டெசிபல் அளவுக்கும் அதிகமாக இருக்கும். இது ஒரு சூப்பர்சோனிக் விமானத்தின் ஒலியை விட 3 டெசிபல் அதிகம். மேலும், பன்றிகள் ஒன்றோடொன்று தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. துணையை வசீகரிப்பதில் இருந்து, தனக்கு பசிக்கிறது என பன்றிகள் வெளிப்படுத்துவது வரை 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு குரல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பன்றிகள் மனித எலும்புகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்தையும் சாப்பிடக்கூடியவை. பன்றிகள் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் நம்பமுடியாத சமூக விலங்குகள். அவைகளும் மனிதர்களைப் போலவே, கனவு காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெறுமனே கனவு காண்பது மட்டுமல்ல, பன்றிகளின் மரபணு அமைப்பும் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. இதன் காரணமாகத்தான், பன்றிகளின் ஸ்டெம் செல்கள் மனித நோய்களுக்கான சிகிச்சையை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் 'தி கிங் ஆஃப் பிக்ஸ்'-ன் இயக்குநர், பன்றியை ஒரு குறியீடாக இதில் பயன்படுத்தியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பன்றியை மனித முகமாக்கி மனிதர்களுக்குள் ஒளிந்துக் கிடக்கும் அருவெறுக்கத்தக்க குணவியல்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கும் 'தி கிங் ஆஃப் பிக்ஸ்' ரசிக்கும்படியாக இருப்பதோடு, அடுத்த எபிசோடுக்கான தேடலை தீவிரப்படுத்தியிருக்கிறது. நாமும் பின்தொடர்வோம்.