

அண்மைக் காலமாக கன்னட சினிமாக்கள் தனித்துவமான கதைக்களங்களுடன் இந்திய அளவில் தனி முத்திரை பதித்து வருகின்றன. அந்த வகையில் ஆக்ஷன், வன்முறையை கையிலெடுக்காமல் நகைச்சுவையை மட்டுமே நம்பி பெரும் வெற்றி பெற்ற படம் ‘சு ஃப்ரம் சோ’. திரையரங்க வெளியீட்டில் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஒரு மலை சூழ்ந்த குக்கிராமம் மர்லூர். அங்கே வாழும் அசோகா (ஜே.பி.துமினாட்) என்ற இளைஞனுக்கு பேய் பிடித்துவிட்டதாக ஊர் மக்கள் நம்புகின்றனர். இயல்பாகவே மூடநம்பிக்கையில் ஊறிப் போய் கிடக்கும் அந்த மக்கள் அந்த இளைஞனை கண்டாலே ‘டரியல்’ ஆகிவிடுகின்றன. ஊர் மக்களால் மிகவும் மதிக்கப்படும் ரவியண்ணா (ஷனீல் கவுதம்) அந்த இளைஞனை பிடித்திருக்கும் பேயை ஓட்ட சில முயற்சிகளை மேற்கொள்கிறார். உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு பேய் பிடித்ததா? அதை விரட்ட ஊர் மக்கள் என்ன செய்தனர் என்பதை நகைச்சுவையாக சொல்கிறது ‘சு ஃப்ரம் சோ’.
பொதுவாக ஒரு சிம்பிளான ஒன்லைனை எடுத்துக் கொண்டு அதை ஒரு நேர்த்தியான திரைக்கதையின் மூலம் நேட்டிவிட்டியுடன் தருவது மலையாள திரையுலகின் பாணி. அண்மைக்காலமாக ஆக்ஷன் ஜானர் பான் இந்தியா படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வரும் கன்னட திரையுலகம் ஒரு அக்மார்க் மலையாள டைப் சினிமாவை கொடுத்து பெரியளவில் ஜெயித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கதையின் செட்டிங் தொடங்கி, கதை மாந்தர்கள், காட்சியமைப்புகள் என அனைத்தும் நாம் பார்ப்பது ஒரு மலையாள திரைப்படமா என்று அடிக்கடி நினைக்க வைத்தது.
கதாபாத்திரத் தேர்வும், அவர்கள் நடித்திருக்கும் விதம், பேசும் வசனங்கள் என அனைத்தும் எந்த மிகையுமின்றி மிக இயல்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. படம் முழுக்க நகைச்சுவை மிக அநாயசமாக கைகொடுத்திருக்கிறது. 2, 3 கதாபாத்திரங்களை சுற்றி மட்டுமே திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும் கடைசி வரை எந்த இடத்திலும் ஒரு சின்ன சலிப்பு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டதில் இயக்குநர் ஜே.பி.துமினாட் ஜெயித்திருக்கிறார்.
படத்தின் ஹீரோவாகவும் அவரே நடித்திருக்கிறார். நடிப்புக்கு பெரிதாக மெனக்கெடவில்லை என்றாலும் படம் முழுக்க ‘கல்லுனி மங்கன்’ போல முகத்தை வைத்துக் கொண்டு அவர் செய்பவையே நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமான ரவியண்ணாவாக வரும் ஷனீல் கவுதம் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக பானு என்ற பெண் உடனான காட்சிகளில் முகத்தில் அவர் காட்டும் மெல்லிய உணர்வுகள் ரசிக்க வைக்கின்றன. பானுவாக நடித்த சந்தியாவும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்.
ராஜ் பி.ஷெட்டி என்ட்ரிக்குப் படம் பட்டாசாக தெறிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் வெரைட்டியான நடிப்பை கொடுப்பதன் மூலம் உண்மையிலேயே வியக்க வைத்துள்ளார். இதில் நிலைமையை சமாளிக்க முடியாத சாமியாராக இரண்டாம் பாதி முழுக்க அதகளப்படுத்தி இருக்கிறார்.
கண்ணை உறுத்தாத அளவுக்கு கலர்ஃபுல் ஆன ஒளிப்பதிவு, மனதை வருடும் இசை, கச்சிதமான எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
படத்தின் குறையென்று பார்த்தால் நாயகன் சொல்வதை கேட்க ஊரில் துணிச்சலாக ஒருவர் கூட இல்லையா என்று படம் முழுக்க தோன்றிக் கொண்டே இருந்தது. அவரின் நண்பர்களே கூட அவரை கண்டு மிரண்டு கொண்டே இருப்பது நம்பும்படி இல்லை. அதேபோல நகைச்சுவையில் அதிக கவனம் செலுத்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமாக காட்சிகளுக்கு அதிக தேவை இருந்தும், அதை மிக குறைவான அளவிலேயே பயன்படுத்தி இருந்தது சற்றே ஏமாற்றத்தை தருகிறது.
எனினும் குடும்பத்துடன் வார இறுதியை கலகலப்பாக கழிக்க விரும்புவோர் தாராளமாக பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங் இல்லை.