

மலையாளத்தில் வெளியாகி இருக்கிற ரோந்து (Ronth) திரைப்படம், மனிதத்தின் பல அடுக்குகளை ஆராயும் ஒரு படைப்பு எனலாம். இது இரவு ரோந்தில் இருக்கும் 2 காவலர்களின் சாதாரணமான, ஆனால் ஆழமான பயணத்தின் வழியாகச் சொல்லப்படுகிற கதை. அவர்களின் எளிய பயணத்தில் தொடங்கும் கதை, சமூகத் தீர்ப்புகளின் அடித்தளங்களையே தகர்க்கிறது.
படம் தொடங்கும் முதல் காட்சியிலேயே, நிழல்கள் நீண்டு,யதார்த்தத்தின் சுவாச கணம் கூடும்போது, நாடகத்தனம் அகன்று, அந்த காட்சியின் நேரடியான உண்மையின் நெருக்கம் நம்மைப் பற்றிக்கொள்கிறது.இவர்கள் பிரமாண்டத்தைத் துரத்தும் சூப்பர் ஹீரோக்களோ அல்லது மாறுவேடத்தில் பதுங்கியிருக்கும் வில்லன்களோ அல்ல. இவர்கள், தங்களுக்குள் இருக்கும் அறியாமையுடனும் போராடிக்கொண்டே, சட்டம் சாரந்த ஒழுங்கின் மெல்லிய கயிற்றை பிடித்துக் கொண்டு பணியில் இருக்கும் இரண்டு சக மனிதர்கள்.
மங்கிய ஒளியில் விரியும்சாலைகளில் அவர்கள் பயணித்து, இரவின் கணிக்க முடியாத முரண்களை எதிர்கொள்ளும்போது, அவர்களின் அக உலகிற்குள் நாமும் பயணிக்கிறோம். அவர்களின் பலவீனங்கள், போராட்டங்கள் மற்றும் தார்மீகசிக்கல்களைக் கண்கூடாக கண்டு உணர்கிறோம். கடமையின் ஒவ்வொரு சாதாரணத் தருணமும் ஆழமான உண்மையின் பிரதிபலிப்பாக மாறுகிறது. அப்போது, அவர்களின் சீருடை மெல்ல சாயம் இழந்து, அவர்களுக்குள் இருக்கும் சாதாரண மனிதர்கள் வெளிப்படுகிறார்கள்.
“மனிதர்கள் தாங்கள் வரையறைத்து வைத்துள்ள புரிதல் மட்டத்திலிருந்துதான் பிறரை புரிந்துகொள்கிறார்கள் என்பதை உணர்ந்தபிறகு, நான் என்னைபற்றி பிறருக்கு விளக்குவதை நிறுத்திவிட்டேன்,” என்று ஜிம் கேரி கூறியது நினைவுக்கு வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்தப்புரிதல் பெரும்பாலும் முன் முடிவுகளால், வதந்திகளால் அல்லது சில வைரல் வீடியோக்களால் உருவாக்கப்படுகிறது.
குறிப்பாக, காவல்துறையினரைப் போன்ற அதிகார மையங்களில் இருப்பவர்களை, ஊழல் செய்யும் அதிகார வெறியர்களாகவோ அல்லது விரைப்பான கட்டுப்பாட்டின் குறியீடுகளாகவோ சுருக்கிப் பார்த்தே பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், அவர்களுடைய பணியை ஏற்று, காவலர்களாக ஓரிரவு உலா வந்தால் எப்படி இருக்கும் என்று எத்தனை முறை யோசித்துப் பார்த்திருக்கின்றோம்? மனிதத்தின் இருண்ட பக்கங்களைக் கண்டுவிட்டு, மீண்டும் வீடு திரும்பி தங்கள் குழந்தையை கைகளில் ஏந்தும் தருணங்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான மன உளைச்சலைத் தரும்?
எப்போதாவது சிந்தித்திருப்போமா? அன்றாட நிகழ்வுகள், கலை, இசை, சிலரின் சாதனைகள் என அனைத்தையும், ஒரு புலப்படாத லென்ஸின் வழியாகவே நாம் பார்க்கிறோம். இது தனிநபரின் திறமையைத் தாண்டி அவரது ஒழுக்கத்தையும் சேர்த்தே எப்போதும் அளவிடுகிறது. ஓர் இசையமைப்பாளர், தனது இசையால் உருகவைக்கிறார், ஆனால் சமூக ஊடகங்களோ, அவரது தனிப்பட்ட குணநலன்களைப் பற்றிப்பேசும்படி நம்மைத் தூண்டுகிறது.
சிறந்த மனிதர்களிடம் அவர்களுடைய திறமைகளைத் தாண்டி அவர்கள் எவ்வகையான குற்றங்குறைகளுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், நாம் பலவீனமான அடித்தளத்தை அல்லவா உருவாக்குகிறோம்? ‘ரோந்து’ திரைப்படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்த ஒரு சம்பவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள புனிதமான ஆசிரமத்தில், தீய குணங்களுக்காக அறியப்பட்ட ஒரு நபர், பளபளப்பான வெள்ளைச் சட்டையுடன் நுழைந்தார். அவருடைய வருகை அங்குள்ள பக்தர்களை கலக்கமடையச் செய்தது. ஒரு பக்தர், பகவான் ரமணரை அணுகி, இப்படிப்பட்ட நபரை இந்த இடத்துக்குள் எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்கிறார்.
பகவான் ரமணர், “அவரது வெள்ளைச் சட்டை எவ்வளவு சுத்தமாகவும்,பளபளப்பாகவும் இருக்கிறது பார்” என்று பதிலளித்தார். அது உபதேசமும் அல்ல, தீர்ப்பும் அல்ல. நாம் பெரும்பாலும் புறக்கணிக்கும் ஒன்றை, நிஜமாகவே உற்றுநோக்கச் செய்யும் மென்மையான அறிவுறுத்தல். இந்த காலத்தின் தேவை என்னவென்றால், நாம் கலையையும் கலைஞனையும் ஒன்றாக அணுகி அளவிடுவதை நிறுத்த வேண்டும். அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் வெளிப்படும் செயல்கள், அவர்களது கலையால் வெளிப்படும் மனிதநேயத்தை காயப்படுத்தாதவரை, கலையையும் கலைஞனையும் ஒன்றாக அணுக வேண்டிய அவசியமில்லை என்பதை உணரவேண்டும்.
‘ரோந்து’ திரைப்படம் வெளிப்படையான யதார்த்தத்துடன் சித்தரிப்பதுபோல, வாழ்க்கை தெளிவான கதாநாயகர்களையோ வில்லன்களையோ கடந்துவரும் வாய்ப்பை வழங்குவதில்லை. மாறாக அது, நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளையும், அதன் முடிவுகளையும் அவற்றை புரிந்துகொள்ளும் தருணங்களை மட்டுமே வழங்குகிறது.
ஒவ்வொரு சீருடைக்குள்ளும், ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கதை உறங்கிக்கிடக்கிறது. அது, நமக்கு அறிமுகமாகியுள்ள வாழ்வெனும் முன்கதை சுருக்கத்தை விடவும் சிக்கலானது. நாம் நமக்கே வழங்கும் கருணையை, மற்றவர்களுக்கும் முன்தடைகள்ஏதுமின்றி வழங்க வேண்டும்.
இறுதியாக, ‘நன்மை’ என்பது பரிபூரணத்தில் இல்லை, அது நம் பார்வையில் உள்ளது என்பதை புரிந்து, மற்றவர்களைக் குறித்து அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள் என்ற முன்முடிவுகள் கொண்டு அளப்பதை விட, “மக்களிடம் நாம் எதைக் காண விரும்புகிறோம்?” என்ற நமது எண்ணத்தின் தேர்வே மிக முக்கியமானது என்று உணர வேண்டும். சில நேரங்களில் புறத்தை மட்டும் பார்ப்பதும் போதுமானது. பகவான் ரமணர் வெள்ளை சட்டையை மட்டும் பார்த்தது போல! - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்