

சில படங்கள் அவை வெளியான காலக்கட்டத்தில் பெரிதாக கவனம் பெற்றிருக்காது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அப்படங்கள் தோல்விப் படங்களாக அணுகப்பட்டிருக்கும். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் மேன்மையும், தரமும் சமூக ஊடகங்களில் சிலாகிக்கப்படும். அதற்கு தமிழிலேயே எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
தற்போதைய ஓடிடி காலக்கட்டத்தில் சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் கண்டுகொள்ளப்படாமல் போய், ஓடிடியில் வெளியாகும்போது ‘அடடா.. இதை தியேட்டரில் பார்க்காமல் விட்டுவிட்டோமே’ என்று ஆடியன்ஸை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அப்படி பெரிய திரையில் பெரியளவில் கொண்டாடப்படாமல் ஓடிடியில் பரவலாக கொண்டாடப்பட்டு வரும் படம்தான் ‘மெட்ராஸ் மேட்னி’.
ஜோதி ராமையா என்ற ஓர் எழுத்தாளர் (சத்யராஜ்) தன் மனதில் தோன்றிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை விவரிக்கத் தொடங்குகிறார். ஆட்டோ ஓட்டுநரான கண்ணனின் (காளி வெங்கட்) வாழ்க்கைதான் இந்தப் படத்தின் மையப்புள்ளி.
பெங்களூருவில் ஐடியில் வேலை பார்க்கும் அவரது மகள் தீபிகாவுக்கு (ரோஷினி ஹரிப்ரியன்) பார்க்கும் வரன்கள் எல்லாம் தட்டிச் செல்கின்றன. இன்னொரு பக்கம் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்ல தயராகும் கண்ணனின் இளைய மகன் தினேஷ் (விஷ்வா). எந்நேரமும் சமையலறையே கதி என்று கிடக்கும் கண்ணனின் மனைவி. இவர்கள்தான் எழுத்தாளர் சொல்லும் கதையின் மாந்தர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே ‘மெட்ராஸ் மேட்னி’.
சில படங்களில் மட்டுமே அது கமர்ஷியலோ, கலைப் படைப்போ, திரைக்கதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நேர்த்தியாக அமைந்து முடியும் தருவாயில் ஒரு நல்ல சினிமாவை பார்த்த திருப்தி கிடைக்கும். அப்படியான ஒரு படம் இது. சத்யராஜின் பார்வையில் கதையை சொல்லத் தொடங்கியது புத்திசாலித்தனமான ஐடியா. வாய்ஸ் ஓவர் என்ற பெயரில் படத்தின் போக்கை கெடுக்காமல், அவர் கதைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் விதமே அலாதியாக இருக்கிறது.
மிக யதார்த்தமான ஒரு கதைக்களத்தை எந்தவித போலித்தனங்களும் இல்லாமல், யதார்த்தமான நடிகர்களின் வழியே மிக சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் கார்த்திகேயன் மணி. மிடில் கிளாஸ் வாழ்வியலை காட்டும் படம் என்றதும் எந்நேரமும் அழுது வடிவதும், பணக்கார மாமனாரிடம் சென்று என்று ஹீரோ தன் மிடில் கிளாஸ் வாழ்வியலை விளக்குவதும் தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல் நம் வீட்டில் என்னவெல்லாம் நடக்குமோ அவற்றை மிக சுவாரஸ்யமாக திரையில் வடித்திருக்கிறார்.
நடிகர்களை கையாண்டவிதமும், காட்சிகளில் இழையோடும் மென்சோகம் எந்த இடத்திலும் ஓவர்டோஸ் ஆகிவிடாமல் பார்த்துக் கொண்டதும் பாராட்டத்தக்கது. இயக்குநருக்கு இது முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு சின்னச் சின்ன தருணங்களில் கூட படுநேர்த்தி.
நடிகர்கள்தான் இப்படத்தின் பெரும் பலம். எந்த இடத்திலும் நடிப்பென்றே சொல்லிவிட முடியாத அளவுக்கு காளி வெங்கட் வெகு இயல்பான நடிப்பை தந்திருக்கிறார். ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ரோஷினி குறித்து ஏராளமன மீம்கள் வெளியாகும். இப்படத்தில் பாராட்டத்தக்க சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்திலும் கூட நல்ல நடிப்பை வழங்கியிருந்தார்.
அம்மா கதாபாத்திரத்தில் வரும் ஷெல்லி கிஷோர், காளி வெங்கட்டின் ஆட்டோக்கார நண்பராக வருபவர், விஷ்வா தொடங்கி விஜய் டிவி ராமர், சாம்ஸ் என எந்த கதாபாத்திரமும் வீணடிக்கப்படாமல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சில காட்சிகளில் வரும் தொகுப்பாளினி அர்ச்சனா கூட கடைசியில் கலங்க வைத்து விடுகிறார். அவருடைய பின்னணியை பார்வையாளர்களின் ஊகத்துக்கே விட்டிருப்பது அருமை.
படத்தில் குறிப்பிட்டு பாரட்டப்பட வேண்டிய விஷயம், இதில் குழந்தைகளை கையாண்ட விதம். தமிழ் சினிமாவில் குழந்தைகளை குழந்தைகளாக இருப்பதே அரிதிலும் அரிது. இப்படத்தில் வரும் குழந்தை கதாபாத்திரங்கள் கூட வெகு இயல்பான நடிப்பை தந்துள்ளன. குறிப்பாக வினோத் என்ற கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் மனதை ஈர்க்கிறான்.
குறைந்த பட்ஜெட் என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் வலுவான படம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனங்கள் என அனைத்தும் படத்தின் போக்குக்கு உதவியுள்ளன.
முடியும் தருவாயில் ஒவ்வொருவரும் தன்னையும் தன் குடும்பத்தையும் படத்தின் கதாபாத்திரங்களோடு தொடர்புப்படுத்தி பார்த்து கண்ணீர் சிந்தாமல் இருக்கமுடியாது. தமிழில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி அரிதாக சில குறிஞ்சிப் பூக்கள் பூக்கும்.
‘ஃபீல் குட்’ சினிமா என்ற பெயரில் வெறும் நான்கைந்து நல்ல காட்சிகளை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெற்ற சமீபத்திய சில படங்களுக்கு நடுவே, எல்லா வகையிலும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட இந்த இந்த ‘மெட்ராஸ் மேட்னி’ இன்னும் பெரிதாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய குறிஞ்சிப் பூ. அமேசான் ப்ரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது.