

வயநாட்டில் முத்தங்காவில் 2003-ல் நடந்த பழங்குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒத்த நிழல் படிமமே ‘நரிவேட்டை’ (Narivetta). வீடுகளுக்காக போராடும் மக்களுக்கு எதிராக அரசும் போலீஸும் கைகோத்து நடத்திய வேட்டையில் போலீஸாருக்கு எதிராக கடைநிலை காவலர் களம் இறங்கினால் என்னவாகும் என்ற எழுத்தாளர் அபின் ஜோசப்பின் கதையை இயக்கியிருக்கிறார் அனுராஜ் மனோகர்.
பிடித்த வேலைக்காக காத்திருக்கும் டோவினோ தாமஸ் ஆழப்புழாவிலுள்ள தனது ஊரில் பிரியம்வதா கிருஷ்ணனை காதலிக்கிறார். குடும்பச் சூழலால் உடடியாக ரிசர்வ் போலீஸில் காவலராக சேருகிறார். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் தலைமைக் காவலர் சுராஜ் வெஞ்சாரமூடு. கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் டோவினோவை சுராஜ் அன்பால் வழிமாற்றி வருகிறார்.
வீடு கோரி வயநாட்டில் மழைவாழ் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடத்த தொடங்க, ரிசர்வ் படை அங்கு செல்கிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் போலீஸ் படைக்கு தலைமை அதிகாரியாக வருகிறார் சேரன். போராட்டத்துக்காரர்களிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை எடுபடாமல் போக, போராட்டக்காரர்களுடன் நக்சல்கள் இருப்பதாகக் கூறி போலீஸார் தேடுதல் வேட்டைக்கு செல்லும்போது சுராஜ் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் கலவரம் ஏற்பட, அதையடுத்து திருப்பங்களே ‘நரிவேட்டை’.
நரிவேட்டைக்கான காரணத்தை பழங்குடிகள் தங்கள் நாட்டார் கதை வாயிலாக நம் மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள். எப்போதும் எளிய மனிதர்களின் போராட்டம் திசை திருப்பப்படுவதையும், அதிகார மட்டத்தில் இருப்போரின் மாறும் முகம்களும் அதிர்ச்சியூட்டும். அரசியல்வாதிகள் - போலீஸ் உயர் அதிகாரிகள் இணைந்த பிறகு இரையாக மாறும் மக்களும், அடிமட்ட காவலர்களும் என்ற கோணத்தில் பீதியை உண்டு செய்கிறது இந்தப் படைப்பு. வன்முறை என்பது சாதாரணமாக கடந்து போகாத இடத்தில் இடம்பெற்றுள்ளது. சில குரல்கள் பலரின் மனதை நிச்சயம் பிசையும்.
இந்தப் படத்தின் ஸ்வீட் சர்ப்ரைஸ் நிச்சயம் சேரன்தான். யாரும் எதிர்பார்க்காத நடிப்பும், அவரது பங்களிப்பும் அட்டகாசம். அத்துடன் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடலான ‘வாடா வேடா’ இறுதியில் இடம் பெற்று கவர்கிறது.
அதிகாரத்தை கேள்வி கேட்கும் சாமானியர்களின் நிஜ குரலான இந்தப் படத்தின் முதல் பாதி இழுவையை குறைத்து, அடுத்த பாதியில் இன்னும் உண்மைக்கு அருகே கொண்டு சென்றிருந்தால் உச்சப் படைப்பாக மாறியிருக்கும். சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழில் பார்க்கலாம்.