Azadi: போலீஸ் Vs கைதியின் குடும்பம் ஆடுபுலி ஆட்டம் | ஓடிடி திரை அலசல்
சிறையில் இருந்து கைதி தப்பும் திரைப்படங்கள், வெப் சீரிஸைகளை பார்த்திருப்போம். ஆனால், போலீஸாருக்கும், கைதியின் குடும்பத்தினருக்கும் இடையிலான ஆடுபுலி ஆட்டமே ‘ஆசாதி’.
தனது சகோதரியின் பாதிப்புக்கு காரணமான அரசியல் பிரமுகரின் மகனை வீட்டில் கொன்றதால் சிறையில் இருக்கும் வாய் பேச இயலாத கர்ப்பிணியான கங்கா (ரவீணா ரவி) ஆயுள் தண்டனை கதை. அந்த அரசியல் பிரமுகரின் கட்சியில் பல ஆண்டுகளாக இருக்கும் சின்ன ரவுடி சிவன் (லால்) தான் அவரது தந்தை. பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்கு கங்காவை அனுப்ப சிறைத் துறை முடிவு எடுக்கும்போது, அவருக்கு உறவினர் யாருமில்லாததால் மற்றொரு பெண் கைதியை துணைக்கு சிறைத் துறை அனுப்புகிறது.
மருத்துவமனையில் இருந்து மனைவியையும், பிறக்கப் போகும் குழந்தையையும் கொண்டு செல்ல வருகிறார் சிவனின் மருமகன் ரகு (ஸ்ரீநாத் பாசி). ஸ்ரீநாத் பாசி முயற்சியால் மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்துள்ள இருவர், நர்ஸ், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆகியோரை பணம் கொடுத்து துணைக்கு சேர்க்கிறார். இந்த விஷயம் போலீஸாருக்கு தெரியவர, அங்குதான் ஆடுபுலி ஆட்டம் துவங்குகிறது. இந்த ஆட்டத்தின் க்ளைமேக்ஸ் யாரும் எதிர்பாராத திருப்பத்தை தருவதை மறுக்க முடியாது.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநாத் பாசி சாதாரண நபராக வந்து ஆட்டத்தின் முக்கியப் புள்ளியாகிறார். மருத்துவனையில் இருப்போரிடம் பணம் கொடுத்து உதவி பெறுவது, போலீஸாரிடம் கழிவறையில் அடிவாங்குவது இறுதியில் எடுக்கும் விஸ்வரூபம் என நியாயம் செய்திருக்கிறார்.
வாய் பேச இயலா கர்ப்பிணியாக ரவீணா ரவியை சுற்றியே சுழலும் கதையின் இறுதியில் திருப்பமும் அவர் அருகிலேயே அமைகிறது. அதேபோல் லாலின் நடிப்பு வழக்கம்போல் க்ளாஸ்தான். முக்கியமாக போலீஸ் அதிகாரியாக வரும் வாணி விஸ்வநாத் துப்பறிவில் பரபரப்பை கொண்டு வருகிறார்.
சிறைக் கைதி கதையாக இருந்தாலும் படம் முழுக்க அரசு மருத்துவமனையை சுற்றியே அமைந்துள்ளது. சனீஸ் ஸ்டேன்லி ஒளிப்பதிவில் கவர்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை மருத்துவமனை வளாகத்திலேயே பரபரப்புடன் திரைக்கதையுடன் இணைய வைக்கும் படத்தொகுப்பை நௌபால் அப்துல்லா செய்து விடுகிரார். முக்கியமாக வருண் உன்னி இசையும் திரைப்படத்தை மெருகேற்றுகிறது.
சில லாஜிக் மீறலுண்டு, ஆனால் விறுவிறுப்பில் அது காணாமல் போய்விடுகிறது. அனைவரிடமும் திறமையாக வேலைவாங்கி நல்ல படத்தை அனைவரும் பார்க்கும் வகையில் விறுவிறுப்பாக தந்ததே இயக்குநர் ஜோ ஜார்ஜ்க்கு வெற்றிதான். படம் ஒரு விஷயத்தை நோக்கிச் சென்று, அப்படியே க்ளைமாக்ஸ் நெருங்கும்போது யு-டர்ன் அடித்து ஆச்சரியப்பட வைப்பதே ‘ஆசாதி’க்கு பிளஸ். தவறவிடாமல் மலையாளம், தமிழில் மனோரமா மேக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
