

ராகேஷ் வர்மா எழுத்து, இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் படம்தான் ‘பிளைண்ட் ஸ்பாட்’. நவீன் சந்திரா, ராஷி சிங், அலி ரேசா மற்றும் ரவி வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
கணவன் - மனைவியான ஜெயராமுக்கும் (ரவி வர்மா) திவ்யாவுக்கும் (ராஷி சிங்) அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு நாள் இரவு அது மிகப் பெரிய சண்டையாக மாறுகிறது. ‘நான் வீட்டில் இருக்கும்போது யாருடன் ஊர் சுற்ற செல்கிறாய்’ என்று திவ்யா கேட்க, திவ்யாவை ஜெயராம் அடித்து விட்டு விமான நிலையத்துக்குச் செல்கிறார்.
சிறிது நேரம் கழித்து பணிப்பெண் லட்சுமி, திவ்யாவின் அறைக்கு சென்று பார்க்கும்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்கிறார். உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட நடந்ததை கூறுகிறார்.
சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் விக்ரம் (நவீன் சந்திரா) வருகிறார். திவ்யாவின் அறையை சுற்றி ஆராய்கிறார். திவ்யாவின் கழுத்தில் இருந்த காயத்தை கண்டு, ‘இது தற்கொலை அல்ல; கொலை’ என்பதை உறுதி செய்கிறார். ஆரம்பத்தில் இருந்து பணிப்பெண் லட்சுமி மீது விக்ரமுக்கு சந்தேகம் இருக்க, அவரிடம் நடத்திய விசாரணையில் லட்சுமியும் அவரது மகளும் சேர்ந்து திவ்யாவை கொன்றது தெரிய வருகிறது. லட்சுமியின் மகள், திவ்யாவை ஒரு சண்டையில் சுவர் மீது பலமாக தள்ளியாதல் அவர் இறந்தது தெரிய வருகிறது.
திவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் திவ்யா தலையில் அடிப்பட்டு இறக்கவில்லை என்பது தெரிய வருகிறது. அவருக்கு யாரோ ஒருவர் விஷம் கொடுத்துள்ளதால்தான் அவர் இறந்தது தெரிய வருகிறது. திவ்யாவுக்கு எவ்வாறு விஷம் கொடுக்கப்பட்டது? அதை கொடுத்தது யார்? - இந்தக் கேள்விகளையொட்டி திரைக்கதை நகர்கிறது.
தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் சார்ந்த கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நவீன் சந்திரா இப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வழங்கியுள்ளர். க்ரைம் த்ரில்லருக்கு உரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும் இப்படத்தில் சஸ்பென்ஸுக்கு பஞ்சம் கிடையாது. நொடிக்கு நொடி திருப்பங்களை கொண்டிருக்கும் திரைக்கதையை இயக்குநர் பார்வையாளர்களுக்கு வழங்கிய விதம் பாராட்டத்தக்கது. சில காட்சிகள் நாம் யூகிக்கும் விதமாக இருந்தாலும், அவை கதையின் மீதான ஆர்வத்தை குறைக்கவில்லை.
இதர நடிகர், நடிகைகளும் தங்களுக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். தர்ஷன் அம்படின் கேமரா இரவுக் காட்சிகளை சரியாக படம் பிடித்திருக்கிறது. துப்பறியும் காட்சிகளுக்கு பின்னணி இசை மேலும் பலம் சேர்க்கிறது. க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்துள்ள இந்தத் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் காணலாம். >>ட்ரெய்லர் வீடியோ லிங்க்