Last Updated : 26 Jun, 2025 09:16 AM

 

Published : 26 Jun 2025 09:16 AM
Last Updated : 26 Jun 2025 09:16 AM

IronHeart: மீண்டும் மீண்டும் சொதப்பும் மார்வெல் | ஓடிடி திரை அலசல்

சமீபநாட்களாக பெண் கதாபாத்திரங்கள், குறிப்பாக கருப்பினத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் பிரதானமாக இடம்பெறும் படங்கள் அல்லது வெப் தொடர்கள் ரிலீஸுக்கு முன்பே கடும் ட்ரோலை எதிர்கொள்ளும் போக்கு ஹாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ‘அயர்ன்ஹார்ட்’ (IronHeart) வெப் தொடரின் அறிவிப்பு வெளியாகி ட்ரெய்லர் வரை இதன் மீது கடும் வெறுப்பு உமிழப்பட்டது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு விறுவிறுப்பான திரைக்கதை மூலம் வசவாளர்களின் வாயை அடைக்கும் வாய்ப்பை நழுவ விட்டு மீண்டும் சொதப்பியுள்ளது மார்வெல்.

‘ப்ளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்’ படத்தில் இடம்பெற்ற ரிரி வில்லியம்ஸ் என்ற பெண்ணைப் பற்றிய கதை இது. அப்படத்தின் முடிவில் இருந்தே இத்தொடரின் கதை தொடங்குகிறது. பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரிரி (டாமினிக் தார்ன்), தன்னுடைய ஏஐ கண்டுபிடிப்பை முடிக்க பார்க்கர் ராபின்ஸ் / தி ஹூட் தலைமையிலான டீன் ஏஜ் நபர்களின் குழுவில் இணைகிறார். ஆனால் போகப் போக பார்க்கரின் மேஜிக் திறனால் தனது கண்டுபிடிப்புகள் விநோதமாக செயல்படுவதை உணர்கிறார் ரிரி. இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. பிறகு என்னவானது என்பதே ‘அயர்ன்ஹார்ட்’ தொடரின் கதை.

‘எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு ஒரு டெம்ப்ளேட்டுக்குள் மார்வெல் சிக்கிக் கொண்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அச்சு பிசகாமல் அவை அனைத்தும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. முதல் எபிசோடில் இருந்தே எந்த இடத்திலும் இயக்குநரால் சுவாரஸ்யத்தை தக்கவைக்க முடியவில்லை.

இதே பாணியை பின்பற்றி இதற்கு முன்பு வெளியான ‘மிஸ் மார்வெல்’ தொடரை கூட ஒரு சில இடங்களில் ரசிக்க முடிந்தது. ஆனால் இங்கே அதற்கும் வழியில்லை. எமோஷனலுக்காக ரிரியின் இறந்து போன தோழி நடாலி என்ற ஒரு கதாபாத்திரத்தை காட்டுகிறார்கள். அவர் தொடர்பாக வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் ‘க்ரிஞ்சு’ ரகம்.

கதையாக ஒரு சூப்பர் ஹீரோ தொடருக்கு தேவையான அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதை திரையில் கொண்டு வந்த விதத்தில் சொதப்பியுள்ளனர். ஒரு சிலரை தவிர பிரதான கதாபாத்திரத்தில் நடித்த டாமினிக் தார்ன் உட்பல பெரும்பாலோனோரின் நடிப்பில் ஒருவித செயற்கைத் தனத்தை உணர முடிகிறது.

சீரிஸ் முழுக்க நாயகி ஒரு ஜீனியஸ், ஜீனியஸ் என்று அனைத்து கேரக்டர்களும் வாய் வழியாக மட்டுமே சொல்கிறார்களே தவிர, அதனை ஆடியன்ஸுக்கு அழுத்தமாக கடத்தும் ஒரு காட்சி கூட இல்லை. தொடக்கத்தில் வரும் லிஃப்ட் காட்சியிலும் பெரிய தாக்கம் எதுவும் இல்லை. ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரத்துக்கு மாற்றாக ஒரு கதாபாத்திரத்தை கொண்டு வரவேண்டும் என்பது மார்வெலின் எண்ணம் என்பது புரிகிறது. ஆனால் அதற்கு ஏற்ப வலுவான அடித்தளத்தை அமைக்காமல் போகிற போக்கில் வசனத்தின் மூலமே தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியுமா?

தற்போது மார்வெல் தனது 5-ஆம் கட்டத்தில் இருக்கிறது. ‘எண்ட் கேம்’ வரை தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மார்வெலிடம் அதன் பிறகு அதிக தடுமாற்றத்தை பார்க்க முடிகிறது. ‘லோகி’, ‘வாண்டாவிஷன்’, ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி 3’ உள்ளிட்ட சில விதிவிலக்குகள் உண்டு.

மற்ற தொடர்களை காட்டிலும் இத்தொடரின் அறிவிப்பு வெளியானது முதலே இனவெறி ரீதியிலான தாக்குதல்கள் இணையத்தில் தொடுக்கப்பட்டன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பே இத்தொடருக்கான அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில், வசவாளர்களின் வாயை அடைக்கும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டு ஒரு அட்டகாசமான சிரீஸை கொடுக்கும் வாய்ப்பை மார்வெல் நழுவ விட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x