

உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஹாரர் காமெடி படங்களுக்கு என்றே இந்தியாவில் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. எல்லா காலத்திலும் இந்த வகை படங்களுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழியிலும் வரவேற்பு உண்டு. இதற்கு ‘ஸ்ட்ரீ’, ‘காஞ்சனா’ போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் ‘சுபம்’.
ஆந்திராவின் கடலோர கிராமம் ஒன்றில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருப்பவர் சீனு (ஹர்ஷித் ரெட்டி). இவருக்கு ஸ்ரீவள்ளி (ஷ்ரியா கோந்தம்) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுகிறது. முதலிரவின் போது இரவு 9 மணி ஆனதும் டிவி சீரியல் ஒன்றை பார்க்க அமரும் ஸ்ரீவள்ளி விநோதமாக நடந்து கொள்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் சீனு இந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் சொல்கிறார். பிறகு தான் தெரிகிறது அவர்களின் மனைவிகளும் சரியாக இரவு 9 மணிக்கு இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது.
நாளுக்கு நாள் மனைவிகளின் செயல்பாடுகள் அந்த சீரியலை பார்க்கும்போது மிகவும் ஆக்ரோஷமாக மாறுவதை காணும் மூவரும் பேயோட்டியான மாயாவிடம் (சமந்தா) தீர்வு கேட்க சொல்கின்றனர். மாயா சொல்லும் தீர்வு கைகொடுத்ததா? இறுதியில் என்ன ஆனது என்பதை கலகலப்பாகவும், ஒரு நல்ல ‘மெசேஜ்’ உடனும் சொல்கிறது ‘சுபம்’.
கதை செல்போன்கள் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கும் காலகட்டத்துக்கு முன்பு நடப்பதாக காட்டியிருப்பது கதையின் நம்பகத்தன்மைக்கு வலுசேர்க்கிறது. காரணம் 90-களின் இறுதிக்குப் பிறகு இந்திய வீடுகளில் டிவி சீரியல்கள் செலுத்திய ஆதிக்கம் எத்தகையது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை கதைக்கருவாக எடுத்துக் கொண்டு ஒரு ரகளையான அனுபவத்தை தந்திருக்கிறார் பிரவீன் காண்ட்ரேகுலா.
ஃபேமிலி என்டர்டெயின்மென்ட், ஹாரர் காமெடி என்றதுமே இரட்டை அர்த்த வசனங்கள், ஐட்டம் பாடல் என்று எதையும் வலிந்து திணிக்காமல் உண்மையாகவே குடும்பத்துடன் ரசிக்கும்படி திரைக்கதையை எழுதிய வசந்த மரிங்கட்டியையும் மனதார பாராட்டலாம்.
படத்தின் பெரும் பலம் அதன் நடிகர்கள் தேர்வு. ஒரு நல்ல படத்துக்கு நடிகர்களின் உறுதுணை எவ்வளவு அவசியம் என்பதை இப்படம் மீண்டும் உணர்த்தியுள்ளது. பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஹர்ஷித் ரெட்டி, ஷ்ரியா கோந்தம் மட்டுமின்றி அவர்களது நண்பர்களாக வரும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், சரண் பெரு, ஸ்ரவாணி லட்சுமி, ஷாலினி ஆகியோரும் மிகச் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். டிஷ் குமாராக வருபவர் மனதில் நிற்கிறார். படத்தின் தயாரிப்பாளர் சமந்தா, மாயா என்ற கேரக்டரில் வரும் காட்சிகள் அதகளம்.
விவேக் சாகரின் பின்னணி இசை பல இடங்களில் டிவி சீரியலை நினைவுப்படுத்துவது போல இருந்தாலும் கதையின் மையப்புள்ளியே ஒரு சீரியலை பற்றியதுதான் என்பதால் பெரிய நெருடல் இல்லை. மிருதுல் சுஜித் சென்னின் ஒளிப்பதிவு நேர்த்தி.
ஹாரர், காமெடி என்று படம் சென்றாலும் கூட போகிற போக்கில் பெண் கல்வி, பெண்ணடிமைத்தனம், ஆல்ஃபா மேல் கருத்தாக்கம் போன்றவை குறித்து ஆழமான மெசேஜை அழுத்தமாக பேசி செல்கிறது. மசாலா நெடி, ஐட்டம் பாடல்களுக்கு பேர் போன தெலுங்கு சினிமாவில் அண்மைக் காலமாக ‘கோர்ட்’, ‘சுபம்’ போன்ற சமூக பிரச்சினைகளை துணிச்சலாகப் பேசும் படம் நம்பிக்கை அளிக்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.