

மனு ஸ்வராஜ் எழுத்து, இயக்கத்தில் உருவான ஃபேன்டஸி நகைச்சுவை மலையாள திரைப்படம் ‘படக்களம்’ (Padakkalam). நடப்பு ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஷரஃப் யு தீன், சந்தீப் பிரதீப் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜிதின் (சந்தீப் பிரதீப்), ராம்சாத், நகுல் மற்றும் கண்ணன் ஆகியோர் ஸ்ரீ கார்த்திகா திருநாள் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர். அதே கல்லூரியில் பேராசிரியர்களாக ஷாஜி (சுராஜ் வெஞ்சாரமூடு) மற்றும் ரஞ்சித் (ஷரஃப் யு தீன்) ஆகியோர் பணிபுரிகின்றனர். மாணவர்கள் மத்தியில் பிரபலமான பேராசிரியராக விளங்குகிறார் ரஞ்சித். மாணவர்களால் வெறுக்கப்படும் பேராசிரியராக இருக்கிறார் ஷாஜி.
அவர்கள் இருவரும் பணிபுரியும் துறையின் அடுத்த துறைத் தலைவரை நியமனம் செய்யும் நேரம் வருகிறது. அதிக அனுபவம் கொண்ட பேராசிரியராக ஷாஜி விளங்குவதால் அவரை துறைத் தலைவராக நியமிக்க நிர்வாகம் முடிவு செய்கிறது. மாணவர்கள் ரஞ்சித்தை நியமிக்குமாறு வலியுறுத்த, அவர் அதை நிராகரித்து ஷாஜிக்கு தனது ஆதரவை வழங்கிவிட்டு, ஓய்வு அறையை நோக்கி செல்கிறார்.
ஓய்வறையில் ஒரு ரகசிய பொருளின் மூலம் ஷாஜியின் செயல்களை ரஞ்சித் கட்டுப்படுத்துகிறார். இதனை மறைந்திருந்து ஜிதின் கவனித்து விடுகிறார். இதை தனது நண்பர்களிடம் ஜிதின் கூறுகிறார். அவர்கள் அனைவரும் ரஞ்சித்திடம் உள்ள ரகசிய பொருளை திருட திட்டம் போடுகின்றனர். அதை அவர்கள் திருடும்போது, ரஞ்சித் அதனை கண்டுபிடித்து விடுகிறார். இதனால் கோபமடைந்த ரஞ்சித் ஜிதினையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவரின் செயல்களையும் கட்டுப்படுத்தி துன்புறுத்துகிறார்.
ரஞ்சித் எவ்வாறு தங்களை கட்டுபடுத்துகிறார் என்பதை ஜிதின் மற்றும் ஷாஜி தெரிந்து கொள்கின்றனர். கலைப்பொருளின் மூலம் ரஞ்சித் தொடங்கிய விளையாட்டை முடிப்பதுதான் இதற்கான தீர்வு என்பதை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். இருவரும் விளையாட்டை முடிக்க நினைக்கும் நேரத்தில் ரஞ்சித் தலையிட மூவரும் உடல் மாற்றம் (body swap)செய்து கொள்கின்றனர். அந்த உடல் மாற்றத்துக்குப் பின் நடந்த நிகழ்வுகள் என்ன? அவர்கள் மூவரும் விளையாட்டை முடித்தார்களா? இல்லையா என்பதே இந்தப் படத்தின் திரைக்கதை.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுராஜ் வெஞ்சாரமூடு, ஷரஃப் யு தீன் மற்றும் சந்தீப் பிரதீப் ஆகியோர் நிறைவான நடிப்பை தந்திருக்கின்றனர். உடல் மாற்றத்துக்குப் பின் கதாபாத்திரங்களில் ஏற்படும் உடல் பாவனையின் மாற்றங்களும் கச்சிதமாக அவர்களுடைய நடிப்பு பொருந்தியிருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. ஆனாலும், நகைச்சுவை படம் என்பதால் அதுவும் நம்மை சிரிக்கவே வைக்கிறது.
படத்தின் பெரிய பலமாக திகழ்வது நகைச்சுவை தான். ஃபேன்டஸி கதைக்களத்தில் நகைச்சுவையை மையமாக வைத்து பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் படத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மனு ஸ்வராஜுக்கு பாராட்டுக்கள். கதையின் போக்கை திருப்பும் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றியிருக்கலாம். இரண்டு மணி நேரம் உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து வாய்விட்டு சிரிக்க இப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.