

திரையரங்குகளில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட ‘துடரும்’ (தமிழில் ‘தொடரும்’) திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
ஒரு காலத்தில் ஸ்டன்ட் உதவியாளராக பல்வேறு திரைப்படங்களில் பணிபுரிந்து தற்போது பழைய அம்பாசிடர் கார் ஓட்டிக் கொண்டிருப்பவர் சண்முகம் என்கிற பென்ஸ் (மோகன்லால்). தன் கார் மீது அளவுகடந்த நேசம் வைத்திருப்பவர். தன்னைத் தவிர யாரும் டிரைவர் சீட்டில் உட்கார விரும்புவதில்லை. இப்படி இருக்க சண்முகம்வீட்டுக்கு வரும் அவரது மகனின் நண்பர்கள் அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று இடித்து விடுகின்றனர். இதனால் காரை ஒரு மெக்கானிக் கடையில் கொடுக்கிறார் சண்முகம்.
மறுநாள் அந்த கடையில் வேலை செய்யும் இளைஞன் செய்த தவறால், கஞ்சா வழக்கில் சண்முகத்தின் காரை போலீஸார் பறிமுதல் செய்து விடுகின்றனர். அதுவரை ஃபீல் குட் படமாக செல்லும் கதை, த்ரில்லர் பாணிக்கு மாறுகிறது. கார் திரும்ப அவருக்கு கிடைத்ததா, தனக்கு ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சினைகளில் இருந்து ஹீரோ வெளியே வந்தாரா என்பதே ‘துடரும்’ படத்தின் திரைக்கதை.
மனதுக்கு இதமாக, மிகவும் அமைதியான முறையில் தொடங்கும் படம் ஒரு ‘ஸ்லோ பர்ன்’ ஆக படிப்படியாக ஆக்ஷன் த்ரில்லருக்கு மாறுவது ரசிக்கும்படி இருக்கிறது. பல காட்சிகள் யூகிக்கும்படி இருந்தாலும் கூட எந்த இடத்திலும் சலிப்பையோ, தொய்வையோ ஏற்படுத்தவில்லை. எனினும் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் ஒருவித மந்தநிலை ஏற்படுவதையும் சொல்லத்தான் வேண்டும். அதற்கு படத்தின் நீளமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
’த்ரிஷ்யம்’ பாணியில் ஒரு படத்தை கொடுக்க முடிவு செய்து விட்ட படக்குழு அதற்கேற்ற ‘ஷார்ப்’ ஆன திரைக்கதையை எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் தொடர்ந்து மலையாளப் படங்களை பார்ப்பவர்களாலேயே கூட பல காட்சிகளை எளிதாக யூகித்து விடமுடியும். திரைக்கதை எழுத்தாளர் கே.ஆர். சுனில் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தி இருவரும் இன்னும் பல அடுக்குகளைக் கொண்டு கணிக்க முடியாத அளவுக்கு திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மிகைப்படுத்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பஞ்ச் வசனங்கள் போன்ற கமர்ஷியம் வணிகக் கூறுகளைத் தவிர்த்திருப்பது பாராட்டத்தக்கது தான் என்றாலும், முக்கியமான இடங்களில் கூட அப்படியான தருணங்கள் இல்லாதது சற்றே ஏமாற்றுகிறது.
எனினும், மோகன்லால் போன்ற ஓர் அசாதாரண நடிகரிடமிருந்து ஒரு சிறந்த நடிப்பை வெளிகொணர அனைத்து சாத்தியங்களையும் கொண்ட கதையை இயக்குநர் எழுதியுள்ளார் என்பதையும் மறுக்க இயலாது. இதில் வரும் மோகன்லால் ‘லுசிஃபர்’ குரேஷி ஆப்ரகாம் போன்ற அசகாய சூரர் அல்ல. இவர் ‘த்ரிஷ்யம்’ ஜார்ஜ் குட்டியுன் இன்னொரு ‘லைட் வெர்ஷன்’ என்று சொல்லலாம்.
65 வயதிலும் மோகன்லால் ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மையை கூட்ட முடிகிறது. படத்தின் தொடக்கத்தில் மோகன்லாலையும் அவரது மேனரிசங்களையும் பார்ப்பதே நம் முகத்தில் புன்னகையை வரவழைக்க போதுமானதாக இருக்கிறது. அந்த அளவுக்கு மிக யதார்த்தமான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ். ஷோபனா, மோகன்லாலின் மகனாக வரும் தாமஸ் மேத்யூ, போலீஸ் அதிகாரிகளாக வரும் பிரகாஷ் வர்மா, பினு பப்பு என அனைவரும் சிறப்பான நடிப்பு. ஓரிரு காட்சிகளில் வரும் பாரதிராஜா, இளவரசுவும் ஈர்க்கின்றனர்.
ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளையும் கண்களுக்கு விருந்தாக்குகிறது. ஜேக்ஸ் பிஜாயின் பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாக இல்லை. எனினும் ஆக்ஷன் காட்சிகளில் தனது பின்னணி இசையின் மூலம் வலுசேர்க்க முயன்றிருக்கிறார்.
‘த்ரிஷ்யம்’ பாணியிலான திரைக்கதை என்றாலும் கூட அதில் இருந்ததைப் போல புத்திசாலித்தனமான காட்சிகளை விடுத்து இதில் ஆக்ஷனுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர் தருண் மூர்த்தி. அதுவே படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்துவிட்டது.
எனினும், மலையாளப் படங்களின் ரசிகர்களுக்கு இந்த ‘ஸ்லோ-பர்னரை’ ரசிப்பதில் பெரிய பிரச்சினைகள் இருக்காது. ஆக்ஷன் படம் என்றதும் தமிழ், தெலுங்கு படங்களை மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பவர்களின் பொறுமையை இப்படம் சோதிக்கலாம். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.