

நானி லீனியர் தொடங்கி அனீமி வரை, எத்தனையோ வகையான சினிமாக்கள் வந்துகொண்டே இருந்தாலும், க்ரைம் த்ரில்லர் மீது எப்போதும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு தீராத தேடல் இருக்கவேச் செய்கிறது. அதிலும் மாலிவுட்டின் க்ரைம் த்ரில்லர் திரைப்பட பாணிக்கு தனி ரசிக பட்டாளமே உண்டு. கதை, திரைக்கதை தாண்டி அவர்களுடைய ஸ்லோ பர்னிங் மேக்கிங் ஸ்டைல்தான் பலரையும் வெகுசுலபமாக கவர்ந்துவிடுகிறது. அஞ்சாம் பதிரா துவங்கி ஆஃபீஸர் ஆன் டூட்டி வரை ஒவ்வொருவரது பக்கெட் லிஸ்டிலும், ஏராளமான மலையாள க்ரைம் த்ரில்லர் சினிமாக்கள் இடம்பெற்றிருக்கும்.
அந்த வகையில், நடிகர் ஆசிஃப் அலி கடந்த ஓர் ஆண்டில் மூன்று க்ரைம் த்ரில்லர் படங்களில் நடித்திருந்தார். அந்த மூன்று படங்களுமே திரையரங்குகளிலும், ஓடிடி தளத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில், ‘தலவன்’, ‘ரேகாசித்திரம்’ ஆகிய இரண்டு படங்களில் ஆசிஃப் அலி காவல் துறை அதிகாரியாக நடித்திருப்பார். ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகன் வேடத்தை ஏற்றிருப்பார். இந்த மூன்று திரைப்படங்களுமே படத்தின் இறுதிக் காட்சி வரை பார்வையாளர்களை எங்கேஜிங்காக வைத்திருக்கும் திரைப்படங்கள். அதேபோல் வெவ்வேறு சூழல்களில் நிகழும் கொலைகளும், அந்த கொலைக்கான விசாரணைகளும்தான் இப்படங்களின் மையக்கருவாக அமைந்திருக்கும்.
Thalavan: கேரளாவின் செப்பனம்தொட்டா காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளராக பணி மாற்றலாகி வருகிறார் கார்த்திக் (ஆசிஃப் அலி). ஒன்றரை வருடத்தில் இது அவருக்கு 5-ஆவது ட்ரான்ஸ்பர். அதே காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜெயசங்கர் (பிஜு மேனன்). இருவருக்கும் இடையில் ‘ஈகோ’ தலை தூக்க, மோதல் வெடிக்கிறது. இந்தச் சூழலில், ஜெயசங்கர் வீட்டு மொட்டை மாடியில் சாக்கு மூட்டையில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு கிடக்க, அவர் மீது கொலைப்பழி விழுகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கின் விசாரணை கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்க, உண்மையில் அந்தப் பெண்ணை கொன்றது யார்? அதற்கு காரணம் என்ன? ஜெயசங்கர் ஏன் சிக்க வைக்கப்படுகிறார்? இப்படியாக நீளும் கேள்விகளுக்கான விடை தேடும் முயற்சியில், ஒருக்கட்டத்தில் பார்வையாளர்களும் விசாரணை அதிகாரிகளாக மாறிவிடும் அளவுக்கு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங் உடன் காணக் கிடைக்கிறது.
Rekhachithram: பணியின்போது ஆன்லைன் ரம்மி விளையாடியதால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் காவல் அதிகாரி விவேக் கோபிநாத் (ஆசிஃப் அலி). இதனால், அவர் மலக்கப்பாரா என்ற தொலைதூர மலைகிராம காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். அவர் அங்கு பணியில் சேர்ந்த முதல் நாளே, காட்டுப்பகுதியில் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெண்ணின் உடலை அந்த இடத்தில் புதைத்தாக லைவ் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அந்த இடத்தில் காவல் துறை சோதனை செய்ய எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அந்த எலும்புக் கூடு யாருடையது? கொலை எப்படி நடந்தது? யார் கொலை செய்தது? தற்கொலை செய்தவருக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது? அவரது நண்பர்கள் என்ன ஆனார்கள்? - இவற்றுக்கான விடைகள்தான் 'ரேகாசித்திரம்' திரைப்படத்தின் திரைகதை. இந்தப் படம் தமிழ் டப்பிங் உடன் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஈகோவை விட்டுக் கொடுக்காத காவல்துறை அதிகாரியாக ‘Thalavan’ படத்திலும், அதிகாரமிக்க கொலையாளியை கைது செய்யும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக ‘Rekhachithram’ படத்திலும், தனது மிகையற்ற நடிப்பால் வாழ்ந்திருப்பார் ஆசிஃப் அலி. அதேநேரம், சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லரான ‘Kishkindha Kaandam’ படத்தில், காதல்மிக்க கணவனாக, குழந்தையை இழந்த தகப்பனாக, ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் ப்ரியத்துக்குரிய மகனாக பல்வேறு பரிணாமங்களை ஆசிஃப் அலி காட்டியிருப்பார். அவரது நடிப்பில் மேலும் இதுபோன்ற பல திரைப்படங்கள் வரவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.