Black Mirror Season 7: எதிர்காலத்தின் கோரப்பிடி | ஓடிடி திரை அலசல்

Black Mirror Season 7: எதிர்காலத்தின் கோரப்பிடி | ஓடிடி திரை அலசல்
Updated on
2 min read

உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்குமே எதிர்காலம் குறித்த ஒரு சிறிய ஆர்வம் மனதின் ஒரு ஓரத்தில் எப்போதுமே இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சயின்ஸ் பிக்‌ஷன் நாவல்கள், திரைப்படங்களிலே கூட எதிர்காலம் என்றால் இப்படித்தான் இருக்கும் பல யூகங்களை இடம்பெற செய்திருப்பார்கள். நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நமக்கு ஒருவித குறுகுறுப்பு இருப்பது இயல்பு. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதகுலத்துக்கு எந்த அளவுக்கு நன்மை தருகிறதோ அதே அளவுக்கு தீய விளைவுகளையும் எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதே ‘ப்ளாக் மிரர்’ (Black Mirror) தொடரின் அடிநாதம்.

வழக்கமான வெப் தொடர்களை போலல்லாமல், இதில் ஒவ்வொரு எபிசோடும் ஒரு திரைப்படத்தை போல தனித்துவமான கதைகளை கொண்டவை. இதில் நீங்கள் எந்த எபிசோடை வேண்டுமானாலும் ‘ரேண்டம்’ ஆக பார்க்கத் தொடங்கலாம். இந்த வரிசையில் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

2011ஆம் ஆண்டு முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரும் இத்தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு எபிசோடின் கருவும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். எல்லா எபிசோடும் ஒரே ஜானரில் அமையாமல் ஒரு எபிசோட் த்ரில்லராகவும், வேறு ஒரு எபிசோட் டிராமா பாணியிலும், சில எபிசோடுகள் டார்க் காமெடி வகையிலும் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் அமைந்திருப்பது இத்தொடரின் சிறப்பு.

ஆரம்பத்தில் புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் வலுவான திரைக்கதையும் யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத புதிய களமும் இத்தொடரை தனித்து நிற்க வைத்தன. எனினும் பின்னாட்களில் வந்த சீசன்களில் மார்க்கெட் வேல்யூவுக்காக பிரபலமான நடிகர்களை இடம்பெறவைத்ததால் தொடர் அதன் தனித்தன்மையை இழந்ததாக விமர்சனம் எழுந்தது. அந்த குறை தற்போதைய சீசனில் நிவர்த்தி செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.

6 எபிசோட்களைக் கொண்ட இந்த சீசனில் ப்ளாக் மிரரின் ஆரம்ப சீசன்களில் இருந்த புதுமையும், தனித்துவமும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக முதல் எபிசோடாக வரும் ‘காமன் பீபுள்’ ஒரு கிளாசிக் என்று சொல்லும் அளவுக்கு அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலை ஒன்றில் வெல்டராக பணிபுரியும் மைக்கின் மனைவி அமாண்டா திடீரென மயங்கி விழுந்து கோமா நிலைக்கு செல்கிறார். ’ரிவர்மைண்ட்’ என்ற நிறுவனத்தின் உதவியுடன் அவரது நினைவுகள் மீட்டெடுக்கப்பட்டு அவர் குணமடைகிறார். ஆனால் அவரது மூளை தொடர்ந்து இயங்க வெண்டுமென்றால் மாதம் 300 டாலர் திட்டத்தில் சப்ஸ்கிரைப் செய்யவேண்டும்.

ஆனால், இந்த திட்டத்தில் சேரும் அமாண்டா திடீர் திடீரென அவரையே அறியாமல் விளம்பரங்களை ஒப்பிக்கிறார். நிறுவனத்தில் கேட்டால் இந்த திட்டத்தில் விளம்பரங்கள் வரும் என்கின்றனர். ப்ரீமியம் திட்டத்தில் சேர்ந்தால் விளம்பரங்களை தவிர்க்க முடியும் என்று சொல்கிறது ’ரிவர்மைண்ட்’ நிறுவனம். பண நெருக்கடியில் இருக்கும் மைக் இதனால் சில முடிவுகளை எடுக்கிறார்.

மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள இந்த எபிசோடின் காட்சிகள் நிச்சயம் பார்ப்பவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஓடிடி நிறுவனங்கள், யூடியூப் போன்ற தளங்களில் சப்ஸ்கிரிப்ஷன் திட்டங்களை இது நினைவூட்டுகிறது.

இதற்கு அடுத்தபடியாக சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் உருவான ‘Bête Noire’ என்ற தொடர் கவர்கிறது. சிறு வயதில் பள்ளி தோழிகள் தன்னை பற்றி பரப்பிய வதந்தியால் பாதிக்கப்படும் சிறுமி வளர்ந்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழிதீர்க்கும் கதை. நம்பமுடியாத கதைதான் என்றாலும் இதன் மேக்கிங்கும், விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது.

இதற்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ‘ஹோட்டல் ரிவெரி’ சினிமாத் துறை எதிர்காலத்தில் அடையப் போகும் மாற்றம் குறித்து பேசினாலும் ஒரு அருமையான காதல் கதை பின்னணியில் அதை சொன்ன விதம் சிறப்பு. அதே போல ’Plaything’, ‘Eulogy’, ‘USS Callister: Into Infinity’ ஆகிய தொடர்களும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கத்தை அதனதன் பாணியில் விளக்குகின்றன.

இந்த எபிசோடுகள் வெறுமனே தொழில்நுட்பம் என்றதும் கிராபிக்ஸ், ஏஐ என கலந்துகட்டி ஆடியன்ஸுக்கு எதையோ கொடுத்துவிடல்லை. மாறாக ஒவ்வொரு எபிசோடும் மனித உணர்வுகளை பேசுகின்றன, உறவுகளின் மேன்மையை போதிக்கின்றன. மனித மனிதங்களில் படர்ந்திருக்கும் ஈகோ, வன்மம் போன்றவற்றை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

ஒப்பீட்டளவில் சொல்லவேண்டுமென்றால் “USS Callister: Into Infinity” எபிசோட் மட்டுமே சற்று தொய்வாக உணரவைக்கலாம். காரணம் இது முந்தைய சீசனின் தொடர்ச்சி என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். மற்றபடி ஒரே அமர்வில் நம்மை எங்கும் நகரவிடாமல் அத்தனை எபிசோடுகளையும் பார்க்கத் தூண்டும் அளவுக்கு சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது ‘ப்ளாக் மிரர்: சீசன் 7’. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in