

ரந்தீர் கிருஷ்ணன் எழுதி, மிதுன் மனுவேல் தாமஸ் இயக்கத்தில் 2024-ம் ஆண்டு வெளியான மலையாள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'ஆபிரகாம் ஓஸ்லர்'. ஜெயராம் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் மம்முட்டி, அனஸ்வர ராஜன், அனூப் மேனன், அர்ஜுன் அசோகன், சைஜு குருப், ஆர்யா சலீம், செந்தில் கிருஷ்ணா, ஜெகதீஷ் , போத்தன்குமார் மற்றும் திலீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.
தனது விடுமுறையைக் கழிக்க தனது மனைவி மற்றும் மகளுடன் ஆபிரகாம் ஓஸ்லர் (ஜெயராம்) வெளியூர் செல்கிறார். அப்போது, அவருக்கு இரட்டைக் கொலை வழக்கு ஒன்றை விசாரிக்க அழைப்பு வருகிறது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அவர் தனது காரில் புறப்படுகிறார். பயணத்தின் நடுவே தனக்கு வந்த அந்த அழைப்பு போலியானது என்பது தெரிந்து, ஓஸ்லர் வீட்டுக்குச் செல்கிறார். ஆனால், வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் மகள் கடத்தப்பட்டிருப்பது அவருக்கு தெரிய வருகிறது. இது தொடர்பாக வீனித் என்பவரை கைது செய்யப்படுகிறார் என்கிற ஃப்ளாஷ்பேக்குடன் தொடங்குகிறது இந்தப் படத்தின் கதை.
இந்தச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் தாக்கதில் இருந்து மீள முடியாமல் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார் ஓஸ்லர். தொடர்ந்து தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போன வழக்கில் உள்ள மர்மங்களைக் கண்டுப்பிடிக்க முயல்கிறார். அதேநேரத்தில், தொடர் கொலைகளை நிகழ்த்தும் மர்ம நபரை கண்டுபிடிக்கும் விசாரணையிலும் அவர் இறங்குகிறார்.அந்தக் கொலையாளி கொலை செய்யும் அனைத்து மருத்துவமனைகளிலும் பிறந்தநாள் அட்டைகளை விட்டுச் செல்கிறார். அந்த அட்டைகளில் லத்தீன் மொழியில் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விசாரணையின்போது ஓஸ்லர் மற்றும் அவரது குழு, செயற்கை குரல்வளையை பயன்படுத்தும் கிருஷ்ணதாஸை குற்றவாளியாக கருதுகின்றனர். தனது இளமைக்காலத்தில் சிறந்த பாடகராக இருந்த கிருஷ்ணதாஸ் கோழிக்கோடு மருத்துமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் தனது குரலை இழந்துள்ளார். அவரை கைது செய்த பிறகும் கொலை தொடர்ந்து நடக்கிறது.
இந்த விசாரணை சமயத்தில், ஓஸ்லர் பல பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், 1989-ம் ஆண்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களான சிவகுமார், செல்வராஜ், சேவி புன்னூஸ் மற்றும் அலெக்சாண்டர் ஜோசப் ஆகியோரை சந்திக்கிறார். அவர்களின் கல்லூரி காலத்தில் நடந்த சில நிகழ்வுகளுக்கும், தற்போது நடக்கும் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பது போல ஓஸ்லருக்கு தோன்றுகிறது.
கிருஷ்ணதாஸ் அல்லாமல், தற்போது நடக்கும் தொடர் கொலைகளுக்கு காரணம் யார்? கோழிக்கோடு மருத்துமனைக்கும் தொடர் கொலைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? - இதுபோன்ற பல புதிர்களுக்கான விடைதான் இப்படத்தின் திரைக்கதை.
இந்தப் படம், ஒரு போலீஸ் அதிகாரியின் தனிப்பட்ட துயரையும், தொடர்ச்சியான கொலைகளுக்கான மர்மத்தையும், கடந்த கால இருளின் நிழல்களும் ஒருசேர அமைந்த ஒரு த்ரில்லர் படம். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் காணலாம்.