OTT Pick: Office - அலுவலக கலகலப்பு வெப் சீரிஸ்

OTT Pick: Office - அலுவலக கலகலப்பு வெப் சீரிஸ்

Published on

ஒரு கிராமத்து தாசில்தார் அலுவலகத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களை காமெடி ஜானரில் அணுகியிருக்கிறது இந்த 'ஆபீஸ்' வெப் சீரிஸ். அலுவலக பணியாளர்களின் அன்றாட நடவடிக்கைகள், அலுவலக அதிகாரிகளின் தந்திரங்கள், பணிச் சுமை, அலுவலக அரசியல் போன்றவற்றை கலகலப்பாக பேசுகிறது இந்த வெப் சீரிஸ்.

கதையின் நாயகனாக குரு லஷ்மண் மற்றும் நாயகியாக ஸ்மேஹா மணிமேகலை நடித்துள்ளனர். உறுதுணை கதாபாத்திரங்களில் சபரிஷ், கீர்த்திவேல், கெமி, பரந்தாமன், தமிழ்வாணி, சரித்திரன், சிவ அரவிந்த், பிராங்க்ஸ்டர் ரகு, டி.எஸ்.ஆர் உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர். தாசில்தார் அலுவலகத்துக்கு புதிதாக வேலைக்கு வரும் ஐடி ஊழியர் பாரியை (குரு லஷ்மண்), அலுவலகத்தினர் தவறாக ஐஏஎஸ் அதிகாரி என நினைத்து சிறப்பாக வரவேற்பதிலிருந்து தொடங்குகிறது இந்த வெப் சீரிஸ்.

அதே அலுவலகத்தில் பணிபுரியும் இந்து (ஸ்மேஹா) ஐடி பணியின் மீது தீராத ஆவல் கொண்டவராக இருக்கிறார். இந்துவின் கடந்தகால அனுபவங்கள் பாரியுடன் கருத்து மோதலை உருவாக்குகிறது. இவர்கள் இருவருக்குள் நடந்த கசப்பான நிகழ்வுகள், அவ்வப்போது அலுவலகத்தில் அதிர்ச்சியை உருவாக்குகின்றன.

அந்த தாசில்தார் அலுவலகம் அமைந்துள்ள கிராம மக்கள் விவசாயம், நிலப் பிரச்சினை, அரசு உதவிகளைப் பெறுவதற்காக அங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். அந்த சமயத்தில் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் நடக்கும் உரையாடல்கள், சண்டைகள் என அனைத்து சம்பவங்களும், நகைச்சுவை பட்டாசுகளாக வெடிக்கின்றன.

கிராமத்து தாசில்தார் அலுவலக வாழ்க்கையை நகைச்சுவை கலந்து எளிமையாகவும், யதார்த்தமாகவும் நம் கண்முன் நிறுத்துகிறது இந்த 'ஆபீஸ்' வெப் சீரிஸ். கார்ப்பரேட் அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு, இந்த வெப் சீரிஸ் மிக நெருக்கமானதாக இருக்கும். ஒவ்வொரு எபிசோடும் கலகலப்பாகவும், எதிர்பாராத திருப்பங்கள் உடனும் இருப்பதால், அலுவலக வாழ்க்கையின் நிஜமானத் தருணங்களை ரசிப்பதற்கு, இந்த 'ஆபீஸ்' வெப் சீரிஸ் ஒரு சிறந்த தேர்வு. ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரிஸ் காணக் கிடைக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in