

கஷ்டப்படும் குடும்பத்தில் நடக்கும் திருமணங்களுக்கு நகைகளைக் கொடுத்து, திருமணத்துக்குப் பிறகு அதற்கான தொகையை வசூலிக்கும் தொழில் செய்பவர் பி.பி.அஜேஷ். ஸ்டெஃபி என்ற பெண்ணின் திருமணத்துக்கு கொடுத்த நகையால் அஜேஷுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்த நகையை அவர் மீட்டாரா, இல்லையா என்பதுதான் ‘பொன்மேன்’ (PonMan) படத்தின் ஒன்லைன்.
எழுத்தாளர் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய ‘நாலஞ்சு செருப்பக்கார்’ (Naalanchu Cheruppakar) எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள மலையாளத் திரைப்படம் 'Ponman'. ஜி.ஆர். இந்துகோபன், ஜஸ்டின் மேத்யூ இணைந்து எழுதி, அறிமுக இயக்குநர் ஜோதீஷ் சங்கர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' படங்களின் கலை இயக்குநர் தான் ஜோதீஷ் சங்கர். ஆபரணத் தங்கத்தின் அத்தியாவசியத்தையும், அவஸ்தைகளையும் பேசும் இது ஒரு டார்க் காமெடி திரைப்படம்.
ஊரில் கஷ்டப்படும் குடும்பங்களுக்குத் திருமணத்துக்கு முன்பு வரதட்சிணையாக பேசப்பட்ட நகைகளைப் பெண் வீட்டாருக்கு கொடுப்பதும், திருமணம் முடிந்தபிறகு வசூலாகும் மொய் பணத்தில் இருந்து தான் கொடுத்த நகைக்கான பணத்தை பைசா குறையாமல் வசூலிப்பதையும் தொழிலாக கொண்டவர் பி.பி.அஜேஷ் (பசில் ஜோசப்). ஒருவேளை அவர் கொடுத்த நகை அளவுக்கு மொய்ப்பணம் வராவிட்டால், வசூலான தொகை அளவுக்கான நகையை மட்டும் கொடுத்துவிட்டு,எஞ்சிய நகைகளை அஜேஷ் வாங்கிச் செல்வது வழக்கம். ஆபத்து நிறைந்த இத்தொழிலை அஜேஷ் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்.
அப்படி ஒருமுறை, அஜேஷ் தனது நண்பரின் சிபாரிசில் புருனோ என்பவரின் தங்கை ஸ்டெஃபியின் (லிஜோமோல் ஜோஸ்) திருமணத்துக்கு 25 சவரன் நகைகளைக் கொடுக்கிறார். நகைகளைக் கொடுப்பதற்கு முன்பாகவே தனது விதிமுறைகளை எல்லாம் அந்த குடும்பத்தினரிடம் தெளிவாக கூறுகிறார். ஸ்டெஃபியின் அண்ணன் புருனோ, திருமணத்துக்கு முன்பாக செய்த ஒரு தவறால், இந்த கல்யாணத்துக்கு வருவதை பலரும் தவிர்த்து விடுகின்றனர். இதனால் மொய்ப் பணம் குறைந்து விடுகிறது. தனது அக்ரிமென்ட்படி மிச்சப் பணத்துக்கான நகையை கேட்கிறார் அஜேஷ். ஸ்டெஃபி குடும்பத்தினர் நகைகளைத் திருப்பிக் கொடுத்தார்களா, இல்லையா, எஞ்சியத் தொகைக்கான நகைகளை அஜேஷ் எப்படி திரும்பப் பெறுகிறார் என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.
முன்பு கலை இயக்குநராக விருதுகளை குவித்த ஜோதீஷ் சங்கர் தனது அறிமுகப் படத்திலேயே இயக்குநராக அசத்தியிருக்கிறார். உச்சம் தொடும் தங்கத்தின் விலை சாமானிய குடும்ப பெண்களின் திருமண வாழ்க்கையில் நிகழ்த்தும் சோகங்களை அழவைக்காமல் டார்க் காமெடி ஜானரில் நகர்த்தியது சிறப்பு. படத்தின் பிரதானப் பாத்திரங்கள் கதையை எங்கேஜிங்காக நகர்த்தி சுவாராசியப்படுத்துகின்றனர். திருமணப் பந்தத்தில் இணையும் இருவேறு குடும்பங்களில் உள்ள பெண் கதாப்பாத்திரங்களின் வழியே, தங்க நகையின் தேவை என்னவாக இருக்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.
ஒரு நாவல் நிறைய கிளைக் கதைகளைக் கொண்டிருக்கும். இந்தப் படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களுக்கான கிளைக்கதை சுருக்கமாகவும் ரசிக்கும்படியாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல் தங்கம், வாழ்க்கை குறித்து படத்தில் வரும் வசனங்கள் ஷார்ப்பாக இருக்கிறது. படத்தில் ஹுரோயிசத்துக்கான ஸ்கோப் நிறைய இருந்தும், யதார்த்தத்தில் எது சாத்தியாமோ அதை மட்டும் காட்சிப்படுத்திய விதத்தால் படம் வெகு இயல்பாக ஒவ்வொரு பார்வையாளர்களோடும் பொருந்திப் போகிறது.
இந்திய திருமணங்களிலும், உலக வணிகத்திலும் முதன்மைப் பெற்றுள்ள தங்கத்தை கதைக்களமாக்கிய தைரியத்துக்காக இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.கிட்டத்தட்ட ஒரு சவரன் ரூ.66,000-ஐ எட்டும் தங்க நகை விலையேற்றத்தைப் பற்றி இங்கு பேசுவதற்கு யாரும் இல்லை. டிவியைத் திறந்தாலே செய்கூலி, சேதாரமற்ற நகை விளம்பரங்கள்தான். ஒரு குண்டுமணி தங்கத்துக்காக திருமண வயதெட்டிய பெண் பிள்ளைகளைப் பெற்ற குடும்பத்தின் போராட்டக் களத்தை நகைச்சுவைத் ததும்ப படம் பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது இந்தப்படம்.
இறுதிக் காட்சியில், நகைகள் ஏதுமற்ற நாயகியைப் பார்த்து இப்போதுதான் அவள் அழகாக இருப்பதாகவும், அவளது முகம் மின்னுவதாகவும் கூறும் இடம் தங்க நகை குறித்த பொதுப்புத்தி மீதான நுட்பமான துல்லியத் தாக்குதல்.
இந்தப் படம் தொடங்கி முடியும்வரை நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்பவர் பசில் ஜோசப் தான். அநாயசயமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது, காத்திருந்து நகைக்கான தொகையை வசூலிப்பது, அங்கு ஏற்படும் பிரச்சினைகளை நிதானத்துடன் சமாளிப்பது, போதையில் செய்யும் ரகளை என நடிப்பில் பொன்னாக மின்னியிருக்கிறார் பசில் ஜோசப். அதேபோல், ஸ்டெஃபியா வரும் லிஜோமோல் ஜோஸும், கணவராக மரியானோ கதாப்பாத்திரத்தில் வரும் சஜின் கோபுவும், புரூனோவாக வரும் ஆனந்த் மன்மதனும் தங்களது கதாப்பாத்திரங்களை நிறைவுடன் செய்திருக்கின்றனர்.
இந்தப் படம் முழுக்கவே கேரள மாநிலம் கொல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரை கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் தண்ணீர் சூழ்ந்த அந்த நிலபரப்பு கண்களை குளிர்விக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஷானு ஜான் வர்கீஸின் கேமரா கொல்லத்தின் நீர்வழித்தடங்களை நம் மனதினுள் பதியச் செய்கிறது. இசையமைப்பாளர் ஜான் வர்கீஸின் பாடல்களும், பின்னணி இசையும், நிதின் ராஜ் ஆரோலின் கட்ஸும் படத்துக்கு பலம். ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், தமிழ் டப்பிங் உடன் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.