

கற்காலம் முதல் தற்காலம் வரை காதலெனும் உணர்வு ஒன்றுதான். ஆனால், மனிதன் அதை வெளிப்படுத்தும் கொண்டாடும் வழிகள் காலம்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. 1994இல் வெளிவந்த ‘சாங்கிங் எக்ஸ்பிரஸ்’ (Chungking Express), சீன இணை சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான வோங் கர் வாய் இயக்கிய மூன்றாவது ‘மாஸ்டர் பீஸ்’ திரைப்படம்.
இன்றுவரை உலக சினிமா ரசிகர்களால் மீண்டும் மீண்டும் ‘டீகோட்’ செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் இதன் களம் ஓர் உணவகம், ஒரு தங்கும்விடுதி. இரண்டு கதைகளைக் கொண்டுள்ள ஆந்தாலஜியான இப்படத்தில் மொத்தம் மூன்று கதாபாத்திரங்கள். மூவரையும் இணைப்பது காதலும் காதல் தோல்வியும் அதிலிருந்து மீள மீண்டும் ஊற்றெடுக்கும் இரண்டாம் காதலும்தான்.
போதைப் பொருட்களும் குற்றங்களும் மலிந்திருக்கும் ஹாங்காங்கின் உள்ளடங்கிய நகரமான சிம் ஷா சுய் பகுதியின் தங்கும் விடுதிகளையும் உணவகங் களையும் குறிக்கும் சொல்தான் ‘சாங்கிங்’. நடிகர்களின் நடிப்பும் இசையும் ஒளிப்பதிவும் உங்களை மயக்கி சிம் ஷா சுய் நகருக்கே அழைத்துக்கொண்டுபோய் விடும். முபி (Mubi) உலக சினிமா ஓடிடி தளத்தில் பாருங்கள்.