

பிராட் பெய்டன் இயக்கத்தில் லியோ சர்தாரியன் மற்றும் அரோன் எலி கோலைட் எழுதி, கடந்த ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை திரைப்படம் ‘அட்லஸ்’. இதில் ஜெனிஃபர் லோபஸ், சிமு லியு, ஸ்டெர்லிங் கே.பிரவுன் மற்றும் மார்க் ஸ்ட்ராங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2043-ம் ஆண்டு, மனித உருவிலான ஏஐ ரோபோட்டான ஹார்லன், மனிதர்களுக்கு எதிராக இயந்திர போர் நடத்தி 3 மில்லியன் மக்களை கொல்கிறது. இந்த திடீர் தாக்குதலுக்கு எதிராக புதிய சர்வதேச நாடுகளின் கூட்டணி (ICN) அமைக்கப்படுகிறது. ஆனால், இந்த கூட்டணி ஹார்லனை அடையாளம் காணாமல் மற்றொரு கிரகத்துக்கு தப்பவிடுகிறது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து, ஹார்லன் கூட்டாளியான கேஸ்கா ரோபோ பூமியில் மீண்டும் தோன்றி, புதிய சர்வதேச நாடுகளின் கூட்டணியின் ராணுவத்தால் சுற்றி வளைத்து பிடிக்கப்படுகிறது.
கேஸ்காவை விசாரிப்பதன் மூலம் ஹார்லனின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள வழி தேடும் ஆய்வாளர்கள், செயற்கை நுண்ணறிவு மீது மிகப்பெரிய அவநம்பிக்கைக் கொண்ட, ஹார்லன் வடிவமைப்பாளரின் மகளான அட்லஸ் ஷெப்பர்ட்டின் (ஜெனிஃபர் லோபஸ்) உதவியை நாடுகிறார்கள். அவரின் உதவியுடன், ஹார்லன் இருக்கும் இடத்தை ராணுவம் கண்டுபிடிக்கிறது.
அட்லஸ், ஹார்லனின் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒருவர் என்றாலும், அவர்களுடன் சேரும்போது ஏஐ உதவி மெச்சாவை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், அட்லஸ் அதை மறுக்கிறார். இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததா? அட்லஸ் மெச்சாவை பயன்படுத்தினாரா? ஹார்லன் பிடிபட்டாரா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இப்படம், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் மனித உருவ நுண்ணறிவு அப்புறப்படுத்தும் அபாயங்களை உணர்த்துகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுடபத்தால் மனித வாழ்க்கைக்கு ஏற்படும் விளைவுகளை இப்படம் தெளிவாக விளக்குகிறது. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இப்போது காணக் கிடைக்கிறது.