

எளிமையான கதை, கொஞ்சம் சஸ்பென்ஸ், நிறைய நகைச்சுவை, அமர்க்களமான ஜோடி இருந்தால்போதும் இந்திய சினிமா ரெடி. இந்தக் கலவையில் ஏதேனும் குறைந்தால் அவ்வளவுதான். இந்தப் பொழுதுபோக்கு அம்சங்களை நெருங்கி வந்திருப்பதுதான், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘தூம் தாம்’ (Dhoom Dhaam) திரைப்படம்.
திருமண பொருத்தங்கள் பொய்யில் ஆரம்பித்து பின்னர், உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதேபோல் பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் அமைதி வடிவமாக இருக்கும் கோயல் சட்டா (யாமி கவுதம்), வீரமான, தைரியசாலியான வீர் போடார் (பிரதிக் காந்தி) திருமண உறவில் இணைகிறார்கள். முதல் நாள் இரவில் நட்சத்திர ஹோட்டல் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ‘சார்லி எங்கே?’ என கேட்டு அவரது அறைக்குள் இருவர் நுழைய, ஓட்டம் தொடங்குகிறது.
புதுமணத் தம்பதி போலீஸுக்கு சென்றாலும் மற்றொரு குழு அவர்களை துரத்துகிறது. முதல் நாளில் மும்பை வீதியில் தொடங்கிய ஓட்டம் எப்போது முடிந்தது என்பதுதான் நகைச்சுவை கலந்த இந்த த்ரில்லர் கதை. திருமணத்துக்கு முன்பு அமைதியான பெண் என கூறப்படும் யாமி கவுதமின் வீரமான மறுமுகம், பிரதீக் காந்தியின் பயந்த சுபாவத்துடன் கூடிய மனநிலையும் முதல் நாள் இரவில் வெளிவருகிறது. பெண்கள் சுதந்திரமாக இருக்க வழிகொடுக்காத இந்தச் சமூகச் சூழலில், சொல்லப்படும் பொய்கள் குறித்து யாமி கவுதம் பேசும் வசனமே இந்தப் படத்தின் ஹைலைட்.
அத்துடன் ‘ஸ்கேம்’ வெப் சீரிஸ் புகழ் பிரதீக்காந்தியும் தனது பயத்தை வெல்வதற்கு, யாமி துணை நிற்கிறார். அந்த இடங்களில் தனது அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் அவர் ஸ்கோர் செய்திருக்கிறார். யாமி கவுதம் - பிரதிக் காந்தி இடையேயான கெமிஸ்ட்ரி இந்தப் படத்தின் மறுக்க முடியாத ப்ள்ஸ் ஆக அமைந்திருக்கிறது. இயக்குநர் ரிஷப் சேத் கொஞ்சமும் அலட்டி கொள்ளவில்லை. பார்வையாளர்களை சிக்கலாக்கி சிந்திக்க வைக்காமல், பாப்கார்ன் கொரித்தபடி ஜாலியாக பொழுதுபோக்கும் படமாக வந்திருப்பதுதான் இந்த ‘தூம் தாம்’ திரைப்படம்.