

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பாலா இயக்கத்தில், 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அருண் விஜய் நடிப்பில் பொங்கல் திருநாள் ரிலீஸ் ஆன ‘வணங்கான்’ படத்தை இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
கன்னியாகுமரியில் கிடைத்த வேலையைச் செய்துகொண்டு, தனது தங்கையுடன் (ரிதா) வசிக்கிறார் மாற்றுத்திறனாளி இளைஞனான கோட்டி (அருண் விஜய்). அவர் மீது சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்யும் டீனாவுக்கு (ரோஷினி பிரகாஷ்) காதல். அதைச் சட்டை செய்யாத அவன், விளிம்பு நிலை மனிதர்களை யாராவது துன்புறுத்தினால் அவர்களை அடித்துத் துவைக்கும் காளையாகச் சீறுகிறான்.
கோட்டியின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் ஒன்றில் காவலாளியாகச் சேர்க்கப்படுகிறான். அங்கே நடக்கும் அவலம் ஒன்று கோட்டியின் கவனத்துக்கு வர, பிறகு அவன் எடுக்கும் ஆக்ரோஷ அவதாரமும் அதனால் அவனைச் சார்ந்தவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் கதை.
ஒரு மாற்றுத்திறனாளியால்தான் மற்றொரு மாற்றுத்திறனாளியின் மனவலியை, அவர்களுடைய உணர்வின் மொழியைப் புரிந்து கொள்ள முடியும் என்கிற பார்வையின் வழியாக, கோட்டி கையிலெடுக்கும் கொடூர வன்முறைக்கு நியாயம் கற்பித்திருக்கிறார் இயக்குநர் பாலா. கோட்டியின் உலகில் அவன்தான் நீதிபதி என்கிற சித்தரிப்பு, பாலாவின் மோல்டில் வார்க்கப்பட்ட அச்சு அசல் அவலக் கதாநாயகர்களின் பட்டியலில் கோட்டியையும் சேர்த்து விடுகிறது.
காது கேளாத, வாய் பேச முடியாதவராக நாயகன் இருப்பது கதையின் மைய உணர்வில் மட்டுமல்ல, கதை நகர்விலும் அட்டகாசமான பங்கைச் செலுத்தி விடுகிறது.
குற்றத்துக்கான காரணத்தைக் கோட்டியிடமிருந்து அறிந்தால் தவிர, அந்த வழக்கை அடுத்தக்கட்டம் நோக்கி நகர்த்த முடியாது என்கிற நெருக்கடி, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய நிர்பந்தம் காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் ஏற்படுவதன் வழியாக திரைக்கதை வேகமெடுக்கிறது.
பார்வையாளர்கள், தன்னிடம் எதிர்பார்ப்பதைக் கொடுக்க வேண்டும் என தான் பழகிய பாதையில் வணங்கானைக் கொடுத்திருக்கும் பாலாவின் இந்த கம்பேக் படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இப்படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.