

பணி நேரத்தில் இணையத்தில் ரம்மி விளையாடியதற்காகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுகிறார் காவல் ஆய்வாளர் விவேக் கோபிநாத் (ஆசிஃப் அலி). பின்னர் ஒரு கிராமத்துக்குப் பணி மாற்றலாகிறார். அங்கே பணியில் இணைந்த முதல் நாளில் ஒரு முக்கிய பிரமுகரின் தற்கொலை வழக்கு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அதற்கான புலனாய்வில் 40 வருடங்களுக்கு முன்னாள் காணாமல் போன ஒருவரின் வழக்கு எவ்வாறு இணைகிறது என்பதும், அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதுதான், மிகக் குறைந்த முதலீட்டில் தயாராகி திரையரங்குகளில் ரூ.90 கோடி வசூலித்த மலையாளப் படமான ‘ரேகா சித்திரம்’ படத்தின் கதை.
1985-இல் வெளிவந்த ‘காதோடு காதோரம்’ என்கிற திரைப் படத்தை இவ்வழக்கின் புலன் விசாரணைக்குள் நுழைத்து அதையே கதையின் பின்னணியாக்கி ராமு சுனில் - ஜான் மந்திரிக்கல் இப்படத்தின் இயக்குநர் ஜாபின் சாக்கோ ஆகியோர் ‘பிரில்லியண்ட்’ என்று சொல்லத்தக்க வகையில் திரைக்கதையை எழுதி வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.
முன்பு திரையரங்கில் தவறவிட்டிருந்தால், இப்போது சோனி லிவ் தளத்தில் பாருங்கள். இதில் ஒரு பெரிய நடிகரின் பங்களிப் பையும் ஆச்சரியகரமாகப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த காலக் கதையில் இணைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய காட்சிகளும் அடிப்பொளி ரகம்.