

நிறத்தை வைத்து ஒருவருக்கு அங்கீகாரம் தரும் போக்கு அன்றைக்கு மட்டுமல்ல, இன்று வரை சமூகத்தில் இருக்கவேச் செய்கிறது . இது கண்டங்களைக் கடந்து உலகின் பல நாடுகளில் இன்றும் தொடர்கிறது. ஒருவரது நிறத்தை வைத்து மதிப்பிடுபவர்கள், திறமையாளர்களுக்கு மதிப்பளிக்காமல், அவர்களை புறந்தள்ளுவதை இன்றளவும் காணலாம். நிற பாகுபாட்டில் பாதிக்கப்படும் பெண்களின் நிலை குறித்து சொல்லி மாளாது. ஆனால், இந்த பாகுபாட்டைக் கடந்து உயரம் தொட்டவர்கள் ஏராளம். அத்தகைய பாகுபாட்டு கொடுமைகளைத் தாண்டி கடந்த காலங்களில் சாதித்துக் காட்டியவர்களை நம்மில் பலரும் தெரிந்துகொள்வதில்லை.
இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க கருப்பின பெண்கள் அடங்கிய ராணுவக் குழுவின் கவனம் பெறாத சாதனையைப் பற்றி பேசுகிறது இந்த ‘தி சிக்ஸ் டிரிபிள் எய்ட்’ (The Six Triple Eight) திரைப்படம். உலகப் போரில் போர் வீரர்களையும் குடும்பத்தினரையும் இணைப்பது கடிதங்கள்தான். அந்தக் கடிதங்கள் சரிவர கிடைக்காமல் லட்சக்கணக்கில் தேக்கமடைகின்றன.
அமெரிக்க ராணுவத்தின் பல வெள்ளை அதிகாரிகளின் ஆதிக்கம், கருப்பின பெண்கள் முழு பயிற்சி பெற்றும்கூட போர் முனைக்கு அனுப்பப்படாமல், அவர்களைப் புறக்கணிக்கும் சூழல் நிலவுகிறது. பயிற்சியின்போது நடக்கும் தவறுகளை புகைப்படமாக எடுத்து, ராணுவத்தில் கருப்பின பெண்களின் பயிற்சிக்காக செலவிடும் நிதி பயனற்றது என செய்தி வெளியிடுவதற்காக அதிகாரமிக்க வெள்ளையர்கள் கூட்டாக செயல்படுகின்றனர்.
உலகப் போர் வேகமெடுத்த நிலையில், கடிதப் போக்குவரத்து சரியாக இல்லாமல் வீரர்களும், குடும்பத்தினரும் சோர்வடைகின்றனர். அந்த நேரத்தில், அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ஆலோசனைப்படி, தேங்கிய கடிதங்களை சேர்க்கும் பொறுப்பு கருப்பின பெண்கள் ராணுவப் படையான ‘தி சிக்ஸ் டிரிபிள் எய்ட்’ பட்டாலியனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
போர்முனைக்கு செல்வதாக நினைத்து செல்லும் அந்த பட்டாலியன் விமானத்தில் சென்று சேர்ந்த பிறகுதான், தாங்கள் கடிதங்களைப் பிரித்து அவற்றை உரியவர்களிடம் சேர்க்கும் பணியில் ஈடுபட வந்திருப்பது அவர்களுக்குத் தெரிகிறது. இதனால், அந்த பட்டாலியனில் இருப்பவர்கள் வருத்தமடைகின்றனர். ஆனாலும், கடிதம் கிடக்கும் கிடங்குகளைப் பார்த்தவுடன் அதன் தீவிரத்தை உணர்ந்து செயலில் இறங்குகின்றனர்.
அந்தப் பணிகளை எப்படி லாவகமாக செய்து முடித்தனர் என்பதை, அந்த போர்ச் சூழலுக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார் இயக்குநர் டைலர் பெர்ரி. இத்திரைப்படத்தில் கெர்ரி வாஷிங்டன், எபானி ஓப்ஸ்டியன், ஓப்ரா வின்ஃப்ரே, சாரா உள்ளிட்ட பலர் அந்த கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.
கருப்பின பெண்ணுக்கும் வெள்ளை இன வீரருக்கும் இடையே அரும்பும் காதல், மரணத்துக்குப் பிறகு பின்னர் ராணுவத்துக்கு வருவது, ராணுவத்தில் கருப்பின பெண் உயர் அதிகாரிகளின் நிலை, கடுமையான பயிற்சிகள் என நேரில் ராணுவ முகாமுக்கே நாம் சென்றது போல இந்த படத்தை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தின் இறுதியில், இரண்டாம் உலகப் போரின்போது சவாலான அத்தகையப் பணியை மேற்கொண்ட நிஜ வீராங்கனைகளை இயக்குநர் காட்டியிருக்கிறார். ஒரே பெயரிலுள்ள கடிதங்கள், முகவரி முழுமையாக இல்லாத கடிதங்கள், அரித்து போன கடிதங்கள், வீரர்கள் மாறி சென்றதால், போர் முனையை அடையாளம் காணமுடியாதவை தொடங்கி இன்னும் பல சவால்களை படத்தின் கதாப்பாத்திரங்கள் கையாளும் அழகே தனி.
வெள்ளை அதிகாரிகள் நடத்தும் திடீர் சோதனையால் ஏற்படும் அவமானங்களை துணிச்சலுடன் எதிர்கொள்வது என படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறது, உண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள்.
போர் குறித்த திரைப்படங்கள் வன்முறை காட்சிகளுடன் தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி துப்பாக்கிகளே இல்லாமல், கடிதங்கள் வழியாக, இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்தை நம் கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம். தங்கள் திறமையால் போராடி வென்று, நிறத்தை வைத்து ஒதுக்கியவர்களிடம் சல்யூட் பெறுகிறார்கள், இந்த ‘தி சிக்ஸ் டிரிபிள் எய்ட்’ திரைப்படம் மூலம்!