

உலகெங்கும் எவ்வளவோ விளையாட்டுகள் இருந்தாலும் இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கு ரொம்ப பிடித்தது கிரிக்கெட்தான். அதிலும் ஆங்கிலேயர்களால் பிரிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் அவர்களுடைய கிரிக்கெட்டை கைப்பற்றி வைத்ததுடன், இரு நாட்டு அணிகள் மோதினால் ரசிகர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளில் இரு நாட்டு அணிகளும் முக்கியக் காலக்கட்டத்தில் சென்ற சுற்றுப் பயணப் போட்டிகளை அடிப்படையாக வைத்து நெட்ஃப்ளிக்சில் வெளிவந்துள்ளது ‘தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி: இந்தியா vs பாகிஸ்தான்’ (The Greatest rivalry: India vs Pakistan) ஆவணப்படத் தொடர். மொத்தமே மூன்று எபிசோடுகளில் அக்கால அரசியல் தொடங்கி விளையாட்டு வீரர்களின் மனநிலை வரை அனைவரும் அறியும் வகையில் இயக்கியுள்ளனர் சந்திரதேவ் பகத் மற்றும் ஸ்டீவர்ட் சக்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு சமூக, அரசியல் சூழலிலும், விளையாட்டு அரங்கிலும் இரு நாட்டு பெயர்களை கேட்டாலே பலருக்கும் வேகம் பிறக்கும். அதிலும் கிரிக்கெட் என்றால் கேட்கவே வேண்டாம். கடந்த 1999 மற்றும் 2004 இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் இந்தியாவுக்கும் கிரிக்கெட் விளையாட வந்தனர். கிரிக்கெட்டை ஒட்டி இந்தியாவிலிருந்து தங்களின் உறவினர்களை காண பலரும் கூட்டம் கூட்டமாக பாகிஸ்தானுக்கு சென்றனர்.
அப்போது அரசியல் சூழல் - இந்திய கிரிக்கெட் வீரர்கள் நெடுநாளுக்குப் பிறகு கங்குலி தலைமையில் பாகிஸ்தான் சென்றனர். இத்தொடர் பற்றி கிரிக்கெட் ஜாம்பவான்களான வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, ஷோய்ப் அக்தர், இன்சமாம்-உல்-ஹக், வாசிம் அக்ரம், அஸ்வின், ஷிகர் தவான் என பலரும் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர். இதில் சேவாக்கும், அக்தரும் வெளிப்படையாக பேசி ஜொலிக்கின்றனர். அவர்களின் வாழ்வே இந்தத் தொடரால் மாறியதை நினைவுகூர்கின்றனர்.
சேவாக் தொடக்கப் போட்டிகளில் ஜொலிக்காததால் தொடரில் இருந்து தூக்கிவிடுவீர்களோ என்ற அச்சத்தில் இருந்து 300 ரன்கள் குவித்தது, சரியாக விளையாடாத போது மன அழுத்தம் ஏற்பட்டு மனநல மருத்துவர்களை சந்தித்தது, பயத்தில் இருந்து மீண்டது, அதற்காக அவர் என்ன செய்தார் என்பது உள்ளிட்ட ருசிகரமான சம்பவங்களை பகிர்ந்துகொள்வதை கிரிக்கெட் ரசிகர்கள் தவறவிடக்கூடாது.
அதேபோல் அக்தரும் தன் பங்குக்கு பல ஜாலியான - கோபமான விஷயங்களை வெளிப்படையாக சொல்கிறார். சின்ன வயதில் ஓடாமல் இருந்த அவர், தனது அம்மாவின் நம்பிக்கையால் ஓடத் தொடங்கியது, சச்சின் விக்கெட்டை கைப்பற்றிய தருணம், தமிழக வீரர் பாலாஜி தனது வேகமான பந்துகளை விளாசியதை பார்த்து நொந்தது, இந்திய வீரர்களை வீட்டுக்கு விருந்தினராக அழைத்தது, உடலில் காயம் ஏற்பட்ட போதும் தன்னை தன் நாட்டில் சந்தேகித்தது என அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்வது ருசிகரம்.
குறிப்பாக, இருநாட்டு கேப்டன்கள் கங்குலி, இன்சமாம் கருத்துகள் மேம்பட்டவை. தோல்வியை தாண்டியது, பயத்துடன் விளையாட சென்றது, டிரஸ்ஸிங் ரூமில் நடப்பவை என கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த தொடர் விருந்து படைத்திருக்கிறது. இந்தத் தொடரில் முக்கியமான சச்சின், திராவிட் பங்குகள் பற்றியும் அவர்கள் கருத்துகள் இடம் பெறாததும் ஓர் குறைதான்.
பாகிஸ்தான் தொடரில் இந்தியா வென்றதும் ஏற்பட்ட மன அழுத்தத்தை இன்சமமா உல் ஹக் வெளிப்படையாக பகிர்கிறார். அதேபோல் பாகிஸ்தான் அணி சென்னை வந்து டெஸ்ட்டில் வென்றவுடன் நம்மூர் ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி கவுரவித்ததை பாகிஸ்தான் வீரர்கள் சிலாகிக்கின்றனர். நெருக்கடியான நேரத்தில் இரு நாடுகளிடையே பாலமாக கிரிக்கெட் இருந்தது வெளிப்படையாக தெரிகிறது. இன்னும் விரிவாக செய்யாமல் 3 எபிசோட்களில் முடித்து விடுவதுதான் குறையாக உள்ளது.
இரு நாடுகளின் சூழல், சமூக அரசியல் தாக்கத்துடன் கூடிய இரு நாட்டிலும் முக்கியமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டின் முக்கியமான ஆழமான பார்வை, ராஜதந்திரம் என அனைத்தும் கலந்த முக்கியத் தொடராக இத்தொடர் வெளிவந்துள்ளது. கார்கில் போர், இரு நாடுகளிடையே எல்லை பதற்றம் சூழல், இருநாட்டு வீரர்கள் இடையே நட்பு, இரு நாட்டு மக்களின் மனநிலை, ஒரே கேலரியில் இருநாட்டு ரசிகர்கள் தொடங்கி ஐபிஎல் முதல் சீசன் வரை சென்று மும்பை தாக்குதலால் திசை மாறி போன சூழல் என இரு நாட்டு சூழலையும், கிரிக்கெட் தாக்கத்தையும் ஒரு சேர உணர வாய்ப்பை தருகிறது இத்தொடர்.