

குடும்பத்தினர், நண்பர்கள் இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வதுதான் வழக்கம். நினைவுகளை சேகரிக்க ஓராண்டு சுற்றுலாவை குழந்தைகளுகாக ஒரு பெற்றோர் சென்று வந்ததை அழகான பதிவாக்கியிருக்கிறது ‘பிளிங்க்’ (Blink) ஆவணப்படம்.
நான்கு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கை வாழும் ஒரு குடும்பம். மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அக்குடும்பத்தின் 3 குழந்தைகள் அரிதான மரபணு கோளாறால் படிப்படியாக பார்வையை இழக்கவுள்ளதால் அவர்கள் வாழ்க்கை திசை மாறுகிறது. இந்த கஷ்டம் ஏன் என தாய் - தந்தை துடிக்க, பின்னர் வித்தியாசமான முடிவை எடுக்கிறார்கள்.
குழந்தைகள் பார்வைத் திறன் இழக்கும் முன்பாக அவர்கள் விரும்பும் விஷயத்தை, நினைவில் நிலைத்திருக்கும் விருப்பத்தை கேட்கின்றனர். அவர்கள் விருப்பப் பட்டியலை வெறும் புத்தகத்தில் மட்டும் பார்க்காமல், அதை நிறைவேற்ற ஓராண்டு சுற்றுலா செல்ல முடிவு எடுக்கின்றனர். சுற்றுலாவுக்கு தயாராவது, அங்கு சந்திக்கும் சவால்கள், பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதுதான் இந்த ‘பிளிங்க்’ டாக்குமென்டரி.
திபெத்தில் தெருநாயை விட்டு விலக இயலாத பாசம், பாலைவனத்தில் ஒட்டகம் மேல் ஜூஸ் சாப்பிடும் விருப்பத்தை நிறைவேற்றல் என குழந்தைகளின் விருப்ப பட்டியலை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதை ரசிக்க வைத்துவிடுகிறார்கள். ரோப்காரில் அந்தரத்தில் பல மணி நேரம் சிக்கி தவிக்கும் சூழலையும் சந்திக்கிறார்கள். பார்க்கவும், ரசிக்கவும் வைப்பதுடன் வேகமாக செல்லும் நம் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுத்த யோசிக்க வைத்துவிடுகிறார்கள்.
எட்மண்ட் ஸ்டென்சன் மற்றும் டேனியல் ரோஹர் இயக்கிய தவற விடக்கூடாத நேஷனல் ஜியோகிராபி டாக்குமென்டரி என உறுதியாக சொல்லலாம். சோகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நினைவுகளை சேகரித்து வீடு திரும்பியவுடன் மீண்டும் பள்ளி செல்லும்முன் நடக்கும் உரையாடல் நமக்கானது. நேஷனல் ஜியோகிராபிக் ஆவணப்படமான ‘பிளிங்க்’ மொத்தமே 84 நிமிடங்கள்தான்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த டாக்குமென்டரி காணக் கிடைக்கிறது. நம் ஒவ்வொரு கண்சிமிட்டலும் முக்கியமானது, காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு கோணமும் தவறவிடக் கூடாதது என்ற யதார்த்தத்தை சொல்லாமல் உணரலாம்.